சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவான முதலமைச்சர் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன் என சட்டப்பேரவையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் நத்தம் விசுவநாதன்,
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் முதலமைச்சர் பொதுவானவர். எல்லா மதத்திற்கும் சம்பந்தப்பட்டவர். எல்லா மதத்திற்கும் வாழ்த்துச்சொல்லும் போது தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்வது இல்லை..?..” எனக் கேள்வி எழுப்பினார்.
உடனே குறுக்கிட்டுப் பேசிய சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, இது கொள்கை முடிவு எனவும் இது குறித்து நிர்ப்பந்திக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
உடனே குறுக்கிட்டுப் பேசிய அதிமுக எதிர்க்கட்சி சட்டப்பேரவைத் தலைவரான எடப்பாடி பழனிசாமி, 'அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பேசியதில் தவறு ஏதும் இல்லை எனவும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கக்கூடிய முதலமைச்சர் தீபாவளி பண்டிகைக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை' எனவும் கேள்வி எழுப்பினார். இதன்காரணமாக சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'ஆன்மிகத்திற்கு எதிரானக் கட்சி திமுக என்ற வகையில் நாடு முழுவதும் திட்டமிட்டு சித்தரிக்கப்பட்டு வருவதாகவும், தாங்கள் யாருக்கும் அடிபணிந்து போகமாட்டோம் என்றும்; இது பெரியார் வழித்தடத்தில் அண்ணா உருவாக்கிய கட்சி. கலைஞர் வழிநடத்திய கட்சி திராவிட மாடல் ஆட்சி' எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எம்எல்ஏ-க்களே, கேள்விகளை பட்டு பட்டுனு அடிங்க... - கிளாஸ் எடுத்த துரைமுருகன்...