தமிழ்நாட்டின் கடலோர கிராமங்கள் வழியாக பயரங்கவாதிகள் ஊடுருவலைத் தடுக்கும் வகையிலும், கடலோரப் பகுதி மக்களும், காவல்துறையினரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ஆபரேஷன் ஹம்லா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி தமிழ்நாடு முழுவதும் கடலோரப்பகுதிகளில் ஆப்ரேஷன் ஹம்லா ஒத்திகையானது இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த ஒத்திகையில் பயங்கரவாதிகள் வேடத்தில் ஊடுருவி வரும் கடலோர காவல்படை வீரர்களை, காவல்துறையினர் விழிப்போடு செயல்பட்டு பிடிக்க வேண்டும் என்பதே, இந்த பாதுகாப்பு ஒத்திகையின் நோக்கம் ஆகும். இதன் ஓரு பகுதியாக முத்துப்பேட்டை, கடலூர், நாகை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். ஆப்ரேஷன் ஹம்லா சோதனையானது தொடர்ந்து நாளை இரவு 8மணி வரை நடைபெறும் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.