சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் ரூ. 28 கோடி செலவில் மாணவர்களாக கட்டப்பட்டுள்ள ஆண்கள்,பெண்கள் விடுதி மற்றும் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, சரோஜா, கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு கட்டடங்களை திறந்து வைத்தனர்.
பின்னர் நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், புகழ்பெற்ற ஸ்டான்லி கல்லூரியின் மாணவியாகவும், பேராசிரியராகவும் மற்றும் சமூக நலத்துறை அமைச்சராகவும் சரோஜா இருக்கிறார் என்பது பெருமை கொள்ளும் விஷயமாகும்.
மேலும் இந்த ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி சிறப்பான மருத்துவர்களை உருவாக்கி வருகிறது என்ற பெருமையை மாணவர்களாகிய நீங்கள் பெற்றுத் தர வேண்டும். ஸ்டான்லி கல்லூரி மாணவர்களுக்கு அதிநவீன ஆண்கள் விடுதி மற்றும் பெண்கள் விடுதியை 28 கோடி ரூபாய் செலவில் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 100 கோடி செலவில் பல்நோக்கு மருத்துவமனை அமைச்சர் ஜெயகுமார் ஆதரவோடு திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது என்றார்.
இதைதொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில்,என்னுடைய தொகுதியில் ஸ்டான்லி கல்லூரி வருகிறது. நான் 2001ல் சட்டத்துறை அமைச்சராக இருந்ததிலிருந்து இன்றுவரை தொகுதி சட்டமன்ற நிதியில் அதிகபட்சம் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு தான் செலவு செய்துள்ளேன். கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் அளவுக்கு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்கு செலவு செய்துள்ளேன்.
மேலும் இன்னும் என்னென்ன தேவைகள் இருந்தாலும் மருத்துவர்கள் கவலைப்படத் தேவையில்லை, அனைத்தையும் செய்து கொடுக்க அரசு கடமைப்பட்டு இருக்கிறது. நான் ஸ்டான்லி கல்லூரியில் இதுவரை ஆயிரம் மரங்களை நட்டு உள்ளேன். அதேபோல் நான் மருத்துவராக வேண்டும் என்று நினைத்தேன் முடியவில்லை, ஆனால் கடவுள் உங்களுக்கு அந்த வாய்ப்பை கொடுத்துள்ளார். அதை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றார்.