சென்னை: சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் விமானநிலையத்தின் முன்பகுதியில் 3.36 லட்சம் சதுர மீட்டா் பரப்பளவில், ரூ.250 கோடி மதிப்பீட்டில் ஆறு தளங்களுடன் கூடிய அடுக்குமாடி வாகன நிறுத்தம், வணிக வளாகங்கள், முக்கியப் பிரமுகர்களுக்கான ஓய்வு அறைகள் கட்டும் பணி 2018ஆம் ஆண்டு தொடங்கியது.
ஆறு தளங்கள் கொண்ட இந்த வளாகத்தில் 2,100 கார்கள் வரை நிறுத்த முடியும். இந்த அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்திலிருந்து விமான நிலையத்திற்கு நடந்து செல்லும் வகையில் இணைப்பு மேம்பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்து மேம்பாலத்தின் மீது மேற்கூரை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அலுவலர்கள் கூறுகையில், "அடுக்குமாடி வாகன நிறுத்தம், வணிக வளாகங்கள் கட்டும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. புதிய வளாகத்திற்கு வாகனங்கள் செல்லும் வகையில் சாலைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விமான நிலையத்திற்கும், வணிக வளாகத்திற்கும் இடையேயான இணைப்பு பாலம் அமைக்கும் பணிகள் 2021இல் முடிவடைந்தன.

பயணிகள் நடந்து செல்வதற்கு வசதியாக மேம்பாலத்தின் மீது நீள்வட்ட வடிவில் மேற்கூரைகள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதுவரை 75 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளன. பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பணிகள் முழுமையாக முடிவடைந்து விரைவில் அடுக்குமாடி வாகனம் நிறுத்தமிடம் திறக்கப்படும்" என்றனர்.

சென்னை விமானநிலைய அலுவலர்கள் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் இதையே கூறினர். அப்போது, 2021 டிசம்பா் இறுதிக்குள் அடுக்குமாடி கார் பார்க்கிங் செயல்பாட்டிற்கு வந்துவிடும் என்று உறுதியாக கூறினா். ஆனால் தற்போது வரை பணிகள் முடிவடையவில்லை. 75% பணிகள் நிறைவடைந்துள்ளதாக அலுவலர்கள் கூறியுள்ளனர். எனவே, பணிகள் முழுமையாக நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருவது இந்த ஆண்டு இறுதியாகலாம் என்று தெரிகிறது.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு தனி கல்விக்கொள்கை! - குழு அமைத்தது அரசு