சென்னை: ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை இழந்தவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, இதுவரை 20க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர், ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பணம் பறிக்கும் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
முன்னதாக, கடந்த அதிமுக ஆட்சியில் 2020ஆம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதனையடுத்து, தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து இந்த தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.
இதன் பின்பு 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக தலைமையிலான அரசு, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், இதுகுறித்து ஆராய ஒரு குழுவை அமைத்தது. இந்த குழு, அதன் அறிக்கையை கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசிற்கு சமர்பித்தது. இதனையடுத்து, கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் அவசரச் சட்டம் இயற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி, அக்டோபர் 1ஆம் தேதி தமிழ்நாடு அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் அளித்தார். இதன் காரணமாக அக்டோபர் 3ஆம் தேதி இது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களைத் தடை செய்து இயற்றப்பட்ட அவசரச் சட்டத்திற்கு மாற்றாக, நிரந்தர சட்ட மசோதா கடந்த அக்டோபர் 19ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கான மசோதாவை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேரவையில் தாக்கல் செய்தார். இந்த சட்டப்படி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும் என சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டம் குறித்து ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு மீறி விளம்பரங்களை வெளியிடும் தனி நபர்களுக்கு அல்லது நிறுவனங்களுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பணம் அல்லது பொருட்கள் வழங்கும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்வது தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்ட மசோதா குறித்து 24 மணிநேத்தில் விளக்கம் கேட்ட ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.
அதில், மீண்டும் சில திருத்தங்களைச் செய்து அனுப்பும்படி ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்கள் கிடப்பில் இருந்த ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் மசோதாவை, 2வது முறையாக ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார் என தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை - என்னவானது ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா?