சென்னை: காந்தியடிகளின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் வினாடி வினா போட்டி இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் நடைபெறும் என தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வித்துறை இணைச்செயலாளர் அனைத்து மாநில பள்ளிக்கல்வித் துறை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, மகாத்மா காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாள் அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மகாத்மா காந்தி குறித்த வினாடி-வினா போட்டி நடத்துகிறது.
மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, காந்தியடிகளின் மக்கள் பணிகள், வாழ்க்கையோடு இணைந்த காந்தியடிகளின் கருத்துக்கள் என்ற தலைப்பில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. இந்த வினாடி வினா போட்டியில் தொடக்கக் கல்வியில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், நடுநிலை கல்வியில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
இவர்களுக்கான போட்டி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் எனவும், அக்டோபர் 2ஆம் தேதி காலை 10 மணிக்கு போட்டி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தீக்ஷா இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்களது பெயரை பதிவு செய்துகொண்டதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை அலுவர்கள், மாணவர்களை இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்படும் போட்டியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள சொல்லி கல்வித்துறை அதிகாரிகள் அனுப்பியுள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கீழடியில் நடைபெற்ற 6வது கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு!