ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை விதித்து கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது.
முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்களின் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி சில மரணங்கள் நிகழ்ந்ததால், இந்த விளையாட்டிற்குத் தடை விதித்ததாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஜல்லிகட்டுப் போட்டியின்போது ஒவ்வொரு ஆண்டும் 20 பேர் வரை பலியாவதாகவும், உச்ச நீதிமன்றமும் ஜல்லிக்கட்டிற்குத் தடை விதித்தும், மாநில அரசு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும்" வாதிட்டனர்.
ஜல்லிக்கட்டை மட்டும் ஏன் அனுமதிக்கின்றனர்?
ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் அரசு, ஆன்லைன் விளையாட்டிற்கு மட்டும் தடை விதித்துச் சட்டம் இயற்றி உள்ளதாகவும், இது திறமைகளுக்கான விளையாட்டு என்றும் சூதாட்டம் இல்லை என்றும், சட்டத்தை இயற்ற முறையாக எந்தவொரு காரணங்களும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், "இந்த விளையாட்டால் நிறைய பேர் ஏமாந்து போயுள்ளதாகவும், பொது நலனைக் கருத்தில் கொண்டு இந்தச் சட்டம் இயற்றப்பட்டதாகவும், இந்தச் சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் இருக்கிறது" எனவும் தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தள்ளிவைத்தனர்.
அரசியல் சாசனத்துக்கு விரோதமானது
இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், "தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள இந்தச் சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சட்டத்தை ரத்து செய்தனர்.
மேலும், உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்தத் தடையும் இல்லை" எனவும் தீர்ப்பளித்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்