தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரிகள் மார்ச் 16ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. மேலும், இந்த கல்வியாண்டில் கல்லூரிகளை திறப்பதிலும் தொடர்ந்து பிரச்னை இருந்துவருகிறது. இதனால் மாணவர்களுக்கு தேர்வினை நடத்துவதில் பல்வேறு சவால்கள் உள்ளன.
இதன் காரணமாக மாணவர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் விதமாக ஆன்லைன் முறை தேர்வை இந்த ஆண்டு அகில இந்திய தொழில்நுட்பக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. அதனைத் தாெடர்ந்து மாணவர்கள் ஆன்லைன் முறையிலும், நேரடியாகவும் தேர்வெழுதும் வகையில் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது.
மேலும் தமிழ்நாட்டில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் இறுதியாண்டில் சுமார் 1லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். தற்போது இந்த கரோனோ காரணமாக அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. ஆனாலும் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு விரைவாக தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளது.
அதே நேரத்தில் கல்லூரிகளில் தனிமைப்படுத்தும் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. தேர்வினை எழுதுவதற்கு மாணவர்கள் அதிகளவில் ஒன்றாக கூடுவார்கள் என்பதும் சிக்கலாக இருக்கிறது. இதனை தவிர்க்கும் வகையில் அண்ணா பல்கைக்கழகம் தேர்வினை நடத்த புதிய வழிமுறையினை ஆலோசித்து வருகிறது .
அதன்படி இறுதியாண்டு மாணவர்களுக்கு நடத்தவேண்டிய இறுதி செமஸ்டர் தேர்வினை ஆன்லைன் முறையில் நடத்த பரீசிலித்து வருகிறது. ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டாலும், நேரடியாகவும் தேர்வுகள் நடத்தவும் யோசித்து வருகிறது. ஆன்லைன் மூலம் தேர்வினை நடத்தும்போது அனைத்து மாணவர்களும் தேர்வினை எழுதும் சூழல் இல்லாத நிலையும் உள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: எம்.பில், பி.ஹெச்.டி முடிக்க கால நீட்டிப்பு!