ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைகோரிய வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று (ஆக.24) மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் தொலைக்காட்சிகள் மூலம் வகுப்புகள் நடத்த முடியுமா என அரசு தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் எப்படி பின்பற்றப்படுகிறது, எப்படி கண்காணிக்க போகிறீர்கள் என்பது குறித்தும், பெரும்பாலான குடும்பங்களில் ஒரே ஒரு மொபைல் இருக்கும் என்பதால் தனியார் பள்ளிகளில் வகுப்புகளை பதிவு செய்து இணையதளம் மூலம் வெளியிட முடியுமா என்பது குறித்தும் விளக்கம் அளிக்க அரசு தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மலைப்பகுதி மாணவர்களுக்கு எப்படி கல்வி வழங்கப் போகிறார்கள் என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், உலகம் முழுவதும் 30 கோடி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி கற்கின்றனர். ஆன்லைன் வகுப்புகள் எப்படி கண்காணிக்கப்படுகிறது என்பது குறித்தும், சமுதாய கூடங்களில் கல்வி வழங்குவது குறித்தும் விரிவான அறிக்கை அளிப்பதாக தெரிவித்தார்.
ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்வதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகள் எந்தவித சமரசமும் செய்துகொள்ள முடியாது என அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்டு 27ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:ஆன்லைன் வகுப்புகள் குறித்து மாணவர்களிடையே என்.சி.இ.ஆர்.டி நடத்திய ஆய்வு!