சென்னை அடுத்த தாம்பரம் அகரம் பகுதியில் பாலு என்பவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் நேற்று இரவு கடையைப் பூட்டி விட்டு, காலை கடையைத் திறக்க முயன்றபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்த போது கல்லாவிலிருந்த ஐந்தாயிரம் ரூபாய் பணம், மளிகைப் பொருட்கள், இரண்டு அரிசி மூட்டைகள், அரை மூட்டை வெங்காயம் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் சேலையூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தார். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்கள் பணம், மளிகைப் பொருள்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. தொடர்ந்து காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'கணினி வாங்கினால்,1.5 கிலோ வெங்காயம் இலவசம்' - விளம்பரப் பதாகையால் பொதுமக்கள் வியப்பு!