சென்னை விமான நிலையத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'வெங்காய விலை உயர்வுக்கு காரணம் பெரிய மண்டி முதலாளிகள். அவர்கள் பதுக்கி வைத்து செயற்கை ரீதியாக விலையை உயர்த்தி இருக்கிறார்கள். வட மாநிலங்களில் அதிகமாக மழை பெய்ததால் வெங்காய உற்பத்தி பாதித்துள்ளது.
முன்னதாகவே மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தாமதமாக நடவடிக்கை எடுத்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது. முன் கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் விலை உயர்ந்திருக்காது. மத்திய-மாநில அரசுகள் இணைந்து வெங்காய விலையைக் குறைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றன.
குடியுரிமை சட்டத் திருத்த விவகாரத்தில் பாமக எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் நோக்கம் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவில் இலங்கையும் சேர்க்கப்பட வேண்டும். 30 ஆண்டுகளாக தமிழர்களுக்கு பிரச்னை உள்ளது. ஒரே நாளில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்தனர். இலங்கை அதிபர், பிரதமர், ராணுவ செயலாளர் ஆகியோர் போர் குற்றவாளிகள். இன்னமும் இலங்கையில் தமிழர்கள் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் ஆகிய நாடுகள் தான் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் இலங்கையையும் சேர்த்து பாதிக்கப்பட்ட தமிழர்கள் வந்தால் அவர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும்.
2 லட்சம் இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் உள்ளனர். எதிர்காலம் இல்லாமல் உள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்க சட்டத் திருத்தத்தை கொண்டு வர வலியுறுத்துவோம்' என தெரிவித்தார்.
அமமுகவுக்கு இடையூறு கொடுப்பதற்காகவே சட்டத்திருத்தங்கள் - டிடிவி தினகரன்