சென்னை: கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் சுமார் 470 லாரிகள் மூலம், 4 ஆயிரத்து 700 டன் முதல் 5 ஆயிரம் டன் வரை காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
அதில் குறிப்பாக, நாள் ஒன்றுக்கு வெங்காயம் மட்டும் சுமார் ஆயிரத்து 50 டன் என்ற அளவில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில், முதல் ரகம் வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், இரண்டாவது ரகம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், முன்றாவது ரகம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
வெங்காயம் அதிகம் விளையும் ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்படுவது தான், இந்த விலை ஏற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுவதாக, காய்கறி வியாபரிகள் தெரிவிக்கின்றனர்.
காய் கனி மொத்த வியாபர சங்கத்தின் பொருளாளர் சுகுமார் கூறுகையில், "வெங்காயம் விலை தற்போது அதிகமாகி வருகிறது. வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு வெங்காயம் தினமும், 80 முதல் 90 லாரிகளில் ஆயிரம் டன் வரை வரத்தாகும். ஆனால் தற்போது, வடமாநிலங்களில் இருக்கும் வெங்காய சாகுபடி பாதிப்பால் வெங்காயத்தின் விலை உச்சத்தை நெருங்கி வருகிறது. மேலும், வெங்காயம் விலை தற்போது, அதிகமாகி வருவதால் வியாபாரமும் சரி வர இல்லை" என்று தெரிவித்தார்.
கோயம்பேடு சந்தை ஆலோசகர் சௌந்தரராஜன் கூறுகையில், "வெங்காயம் விலை என்பது, தற்போது விண்ணை தொடும் அளவில் இருக்கிறது. பொதுவாக வெங்காயம் உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மகராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, மேற்கு வங்கம், குஜராத், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆனால் தற்போது, அங்கு நிலவும், சில பிரச்சினைகளாலும், தென்மேற்கு பருவமழையாலும் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வட இந்தியாவில் காரிப் பருவ விதைத்தலும் தள்ளிப்போனதால், அந்தப் பருவத்தில் பயிராகி சந்தைக்கு வந்திருக்க வேண்டிய வெங்காயம் இன்னும் சந்தைக்கு வரவில்லை. அதனால் அப்பகுதிகளில் இருந்து எங்களால் கொள்முதல் செய்ய முடியவில்லை" என்று தெரிவித்தார்.
தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கூறியது: "பெரிய வெங்காயம் சாகுபடிக்கு தமிழகத்தில் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இங்கு இருக்கும் அனைவரும் சின்ன வெங்காயம் எனப்படும் சாம்பார் வெங்காயத்தின் சாகுபடி தான் அதிக அளவில் செய்கின்றனர். தற்போது அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலை, நாடும் முழுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, டெல்லி, நாசிக், பஞ்சாப், ஹரியான போன்ற இடங்களில், வெங்காயம் சாகுபடி அக்டோபரில் சந்தைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், தென்மேற்கு பருவமழை ஒரு சில பகுதிகளில் இயல்பை விட மிக மிகக் குறைவாகவும், சில இடங்களில் இயல்புக்கு அதிகமாகவும் பெய்துள்ளது. இந்த பருவநிலை மாற்றத்தால் விற்பனைக்காக சந்தைக்கு வந்திருக்க வேண்டிய வெங்காயம் இன்னும் சந்தைக்கு வராமால் இருப்பதும், விலையேற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்" என்று தெரிவித்தனர்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுவது என்ன? "வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் முதல் பணியாக, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை, சந்தைகளுக்கு கொண்டு வருவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களில் இருந்து, கூட்டுறவுத்துறை நிறுவனங்கள் மூலமாக வெங்காயத்தை மொத்த விலையில் கொள்முதல் செய்து பண்ணைப் பசுமைக் கடைகள், நியாயவிலைக் கடைகள் ஆகியவற்றின் மூலம் மலிவு விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இருந்து வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதுடன், வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகளையும் மத்திய அரசு ஆராய வேண்டும்" எனத் தெரிவித்தார்.
சில்லறை வியாபாரிகளின் கருத்து: "தற்போது வெங்காயம் மொத்த விலையில், ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை கடைகளில் ரூ.100க்கு விற்பனை செய்தால் யார் வாங்குவார்கள். எங்களுக்கு லாபம் என்பது இல்லை. சில மாதங்களுக்கு முன் தக்காளி ரூ.200ஐ கடந்து விற்பனையானது. தற்போது வெங்காயம். நாங்கள் காய்கறிகளை விற்று தான் பிழைப்பு நடத்துகிறோம். எங்களுக்கு என்ன செய்வது எனபது புரியவில்லை" என வேதனை தெரிவித்தனர்.
மீண்டும் 2019 ஆண்டு நிலையா? கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் இதே அக்டோபர் காலத்தில், வெங்காயத்தின் விலை ஒரு கிலோவிற்கு 150 வரை சென்றது. அதற்கு காரணம், உலகிலேயே அதிகபட்சமாக 30 முதல் 40 சதவீதம் வரை வெங்காயம் அதிகமாக பயிரிடப்படும் இடமான மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் பெய்த தொடர் கனமழையில் பயிர்கள் நாசமாகியது தான்.
அதனைத் தொடர்ந்து எகிப்து, மற்றும் பிற நாடுகளில் இருந்து பல்லாரி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன் பின்னர் வெங்காயத்தின் விலை சற்று குறைந்தது. இந்நிலையில் தற்போது வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கபட்டுள்ளாதா, இல்லை வெங்காயத்தின் விலை ஏற்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள டிமேண்டா என்பது குறித்து அரசு நவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க: "தமிழக மக்களின் பிரச்சினை தீரணுமா..! அப்போ தாமரை மலரனும்..!" - நடிகை நமிதா!