சென்னை: கரோனா பரவல் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் நோய்த் தொற்றிலிருந்து மக்களை காப்பதில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். மேலும், மத்திய அரசின் செயல்பாடுகளையும் அவர் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைவர்கள் முதல் கடைக்கோடி மனிதர்கள் வரை நாளுக்கு நாள் தொற்று காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. கரோனா இரண்டாவது அலையில் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை.
பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வருபவர்களிடம் மது, புகை போன்ற பழக்கம் இருக்கிறதா என்பது பற்றியோ, உடல்நிலையைப் பற்றியோ, வழக்கமாக உட்கொள்ளும் மருந்துகளைப் பற்றியோ கேள்விகள் எழுப்பப்படுவதில்லை. குறைந்த பட்சம் இரத்த அழுத்தம் கூட பார்க்கப்படுவதில்லை.
ஊசி போட்டபின் போனில் அழைத்து கூட உடல்நலம் குறித்து விசாரிக்கப்படுவதில்லை. முதல் தவணை முடிந்து இரண்டாவது தவணை தடுப்பூசி போடச் சென்றால் மருந்து கையிருப்பு இல்லை . தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட பின் உடல்நிலையில் ஏற்படும் ஆபத்தற்ற பக்கவிளைவுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசி குறித்த அச்சமும் பரவலாக நீடிக்கிறது.
உலகமே மருந்துக்குத் திண்டாட ஏப்ரல் 11ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வழங்கிய தடுப்பூசிகளில் 12.10 விழுக்காடு வீணாகியுள்ளதாக கிடைத்திருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல் முடிவை எதிர்பார்த்து தமிழ்நாடு அரசு முடங்கிக்கிடக்கிறதோ எனும் ஐயம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
என் சகோதரருக்கே படுக்கை கிடைக்கவில்லை என மத்திய அமைச்சர் ட்விட்டரில் பதிவிடுகிறார். மாநிலங்கள் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தாமல், எங்களிடம் வந்து மருந்து கேட்டால் எப்படி என்கிறார் இன்னொரு அமைச்சர். முன்நின்று நாட்டைக் காக்க வேண்டிய பிரதமரோ தேர்தல் பரப்புரை செய்து ஓய்ந்த இடைவேளையில் 'ஊசி போடும் திருவிழா, ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்' என விதம் விதமான ஃபேன்ஸி பெயர்களைச் சூட்டிக்கொண்டிருக்கிறார்.
மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. ஆக்ஸிஜன் இல்லை. ரெம்டெசிவிர் மருந்து இல்லை. தடுப்பூசிகள் இல்லை. ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம். மாநில அரசுகள் மருந்து கொள்முதல் செய்வதில் முழு சுதந்திரம் இன்னமும் அளிக்கப்படவில்லை. தீர்வுகளைத் தரமுடியாதவர்கள் அதிகாரத்தை மட்டும் கையில் வைத்திருப்பது கேலிக்குரியது. ஆளாளுக்கு அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல என்பதை புரிந்துகொண்டு முன் நகர வேண்டும்.
மத்திய மாநில அரசுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் ஒத்திசைவுடன் தெளிவான திட்டமிடலுடன் செயல்பட வேண்டிய தருணம் இது. அரசின் ஒவ்வொரு அலகும் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும், நோயாளிகளைக் குணப்படுத்துவதிலும் சிறு பிசகும் இல்லாமல் செயல்பட்டாக வேண்டும். ஆட்சியாளர்களே அலட்சியம் காட்டாதீர்" என குறிப்பிட்டுள்ளார்.