சென்னை எழும்பூர், நுங்கம்பாக்கம், குமரன் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செல்போன் பறிப்புகள் தொடர்ந்து நடைப்பெற்ற வண்ணம் இருந்தன. இதனால் காவல்துறை சார்பில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடும் பணியில் தீவிரம் காட்டினர். அப்போது செல்போன் பறிப்பு நடைப்பெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அனைத்து செல்போன் பறிப்பிலும் ஈடுபட்ட நபர் ஹெல்மெட் அணிந்தபடி உள்ளது தெரியவந்தது..
இதனை வைத்து விசாரணை செய்தபோது அனைத்து சம்பவமும் ஒரே நபர் செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனால், அனைத்து காவல் நிலையத்திலும் இவரது புகைப்படத்தை அனுப்பியுள்ளனர். மேலும் இதேபோன்று கோட்டூர்புரம், எழும்பூர் பகுதிகளில் உள்ள வாட்ச் மேன் மற்றும் கடை வியாபாரிகளிடமும் கொள்ளையரின் புகைப்படத்தை காண்பித்து இவரை கண்டால் தகவல் கொடுக்கும் படி தனிப்படை காவல்துறையினர் செல்போன் எண்ணையும் கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி கோட்டூர்புரம் பகுதியில் செல்போன் கொள்ளையர் உலாவி கொண்டிருப்பதாக தனிப்படை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்தத் தெரு முழுவதும் சுற்றியுள்ளனர். அப்போது அந்த கொள்ளையர் மரத்துக்கு அடியில் நின்று செல்போனை பறிக்க தயார் நிலையில் இருந்தார். இதனைக் கண்ட தனிப்படை காவலர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து அவர் மீது மோதி கொள்ளையரை தப்பிக்கவிடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும், அவர் நடைபயிற்சியில் மேற்கொண்டிருந்த ஒரு நபரிடம் செல்போன் பறிக்க முயன்றபோது பிடிப்பட்டுள்ளார்.
மேலும், இவர் மீது எழும்பூர் காவல் நிலையத்தில் மொபைல் பறிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததால் எழும்பூர் காவல்துறையிடம் கைதியை ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சென்னை தாமஸ் மவுண்ட் பகுதியைச் சேர்ந்த வினோத் அலெக்சாண்டர் என்கிற குதிரை சிவா. இவர் தொடர்ந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததால் வீட்டிலிருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விரட்டியடித்துள்ளனர்.
ஆனால், இவர் செல்போன் பறிப்பு, சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு அடிக்கடி சிறைக்கு சென்று வந்துள்ளார். தற்போது குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டிருந்த இவரை கரோனா நோய் அச்சுறுத்தல் காரணமாக நிபந்தனை ஜாமீனில் வெளியே அனுப்பியுள்ளனர். ஆனால் வெளியே வந்த பிறகு வினோத் பிளாட்பாரத்தில் தங்கி பால்பாக்கெட் மற்றும் காய்கறி மூட்டைகளை திருடி வந்துள்ளார். ஆனால், இந்த திருட்டினால் போதுமான வருமானம் கிடைக்காததால் மீண்டும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
குறிப்பாக எழும்பூரில் தங்கியிருந்த வட மாநில ஊழியரிடம் இருந்து 6 செல்போன்களை திருடியுள்ளார். மேலும் நுங்கம்பாக்கம், பாண்டி பஜார் ஆகிய இடங்களிலும் இருசக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளார். இவர் கொள்ளையடிக்கும் பணத்தில் வெளி மாநிலத்திற்கு செல்வது, மது, பெண்கள் என உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
தற்போது, இவரிடமிருந்து 6 செல்போன்கள் மற்றும் பைக் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கெனவே 35க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், இவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் கோரிக்கை