சென்னை: கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு, தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்தது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், இன்று (நவ.14) தலைமைச் செயலகத்தில், இளைஞர் நீதி அமைப்பின்கீழ் செயல்பட்டு வரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது அறிக்கையை சமர்பித்தது.
இளைஞர் நீதி அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சார்பாக பிரதிநிதியும் உள்ளடக்கிய உயர்மட்டக்குழு ஒன்று உருவாக்கப்படும் என்று பிப்ரவரி 2023 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, கடந்த ஏப்ரல் 2023 அன்று இளைஞர் நீதி அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்தும் பொருட்டு, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து அரசு ஆணையிட்டது.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவானது, கடந்த மே 2023 முதல் பொறுப்பேற்றதுடன் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகத் திறன்களை மேம்படுத்த ஏதுவாக பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்பட்டது. அதோடு மட்டுமல்லாது, மேற்படி ஒரு நபர் குழுவானது மாநிலத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு மேற்கொண்டது.
அதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழுவானது, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் நீதிபதி ஆய்வின் அடிப்படையில், முழுமையான அறிக்கை தயாரிக்கப்பட்டு, இன்று தமிழ்நாடு முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நலத்துறை ஆணையர் (பொறுப்பு) வே.அமுதவல்லி, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துருவின் மகள் சக்தி ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!