சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்து லிங்கராஜ் (29) வண்டலூரை அடுத்துள்ள கண்டிகையில் தங்கி ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
இவர் இன்று (ஜூலை 15) வழக்கம்போல் மதியம் வேலைக்குச் செல்வதற்காகத் தாம்பரம் - மதுரவாயல் பைபாசில் சென்று கொண்டிருந்தார். போரூர் அருகே சென்றபோது சாலையின் ஓரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார்.
எதிர்பாராத விபத்து
அப்போது மதுரவாயல் நோக்கி வேகமாக சென்ற லாரியின் பின்சக்கரம் திடீரென கழன்று சாலையோரம் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த முத்து லிங்கராஜ் மீது வேகமாக மோதியது.
இதில் நிலைகுலைந்த முத்து லிங்கராஜ் கீழே விழுந்து பலத்த காயமடைந்து மயங்கினார்.
இதையடுத்து அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் முத்து லிங்கராஜை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
காவல் துறையினர் விசாரணை
இருப்பினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விபத்துக்குக் காரணமான லாரி டிரைவர் ஸ்ரீதர் (30), என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்கிம்மர் கருவி பொருத்தி பல கோடி ரூபாய் கொள்ளை - 3 பேர் கைது