சென்னை: முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று(ஏப்.2) விழுப்புரத்தில் நடந்த அக்கட்சி நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 2024-ல் நாடாளுமன்றத் தேர்தல் வரும்பொழுது சட்டமன்றத் தேர்தலும் வரலாம் என்றும், அதில் வெற்றி பெற்று தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்றும் கூறினார். அதேபோல் அதிமுகவை சீண்டிப் பார்ப்பவர்கள் அழிவார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று(ஏப்.3) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்தேர்தலும் வரலாம் என்ற ஈபிஎஸ் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த இளங்கோவன், "எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமே தெரியாது என நினைக்கிறேன். நாங்களே ஆட்சியை கலைத்தால்தான் நாடாளுமன்றத்தேர்தலுடன் சட்டமன்றத்தேர்தல் வரும். எஸ்ஆர். பொம்மை வழக்கு வந்த பிறகு, எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கி ஆட்சியை கலைத்ததுதானே தவிர, வேறு ஏதுமில்லை.
மீண்டும் முதலமைச்சராவேன் என எடப்பாடி பழனிசாமி சொன்னால்தான் அவருடைய ஆதரவாளர்கள் அவரோடு இருப்பார்கள், இல்லையெனில் ஓ.பன்னீர் செல்வத்திடம் சென்றுவிடுவார்கள். 'ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறைக்கு சாத்தியமில்லை. முதலில் மோடியை சந்தித்து கர்நாடகா தேர்தலையும்; மக்களவை தேர்தலோடு சேர்த்து வையுங்கள் என எடப்பாடி பழனிசாமி சொல்லட்டும்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "சமூக நீதியை உணர்த்துவதற்காக அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் மாநாடு இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இது சமூக நீதியில் அக்கறை உள்ளவர்களை ஒன்றிணைப்பதற்கான மாநாடு, இது அரசியல் களத்திற்கான மாநாடு அல்ல. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சமூக நீதியில் நம்பிக்கை உள்ளவர்கள் கலந்து கொள்வார்கள். ஆருத்ரா மோசடி போன்ற தவறுகளை ஆட்சியில் இருக்கிறோம் என்பதற்காக பாஜகவினர் செய்கிறார்கள். மேலும் பெரிய ஊழல்களில் பணக்காரர்களின் புரோக்கராக மோடி செயல்படுகிறார், பணக்காரர்களுக்கு உதவுகிறார்" என்று கூறினார்.
வரும் ஏப்ரல் 14ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறியது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த இளங்கோவன், "ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும். அண்ணாமலை வெளியிடும் பட்டியலுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "அதிமுகவை சீண்டிப் பார்ப்பவர்கள், அழிந்து போவார்கள்" - ஈபிஎஸ் பேச்சு!