சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் இரண்டு நாட்களாக விடாமல் அதி கனமழை பெய்தது. அதன் காரணமாக, சென்னையில் உள்ள பல இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக மாறியது. இந்நிலையில் சென்னை, வேளச்சேரி 5 பர்லாங் சாலையில் தனியார் கேஸ் நிறுவனமும், கேஸ் நிலையத்திற்குச் சொந்தமான அலுவலக கட்டிடமும் இருந்தது.
இந்த கேஸ் நிலையத்திற்கு அருகே அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் கட்டுவதற்காக பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு பேஸ்மெண்ட் போடப்பட்டிருந்தது. சென்னையில் ஏற்பட்ட புயல் காரணமாக கேஸ் நிலையத்தை ஒட்டியவாறு தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் மண் சரிவு ஏற்பட்டு, கேஸ் நிலையத்திற்குச் சொந்தமான அலுவலக கட்டடம் சுமார் 50 அடி பள்ளத்தில் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தனியார் கேஸ் நிலையத்தில் பணிபுரிந்த ஊழியர் உள்பட 8 பேர் அந்த பள்ளத்திற்குள் சிக்கிக் கொண்டனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பள்ளத்திற்குள் சிக்கியிருந்த 6 பேரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இருவரை மீட்க முடியாமல் போனது.
அதனைத் தொடர்ந்து, பெய்த கனமழை காரணமாக விபத்து ஏற்பட்ட 50 அடி பள்ளத்தில் வேகமாக தண்ணீர் நிரம்பியதால், மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. இருந்தும் எல்என்டி, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் என்எல்சி உள்ளிட்ட மீட்புப் படையினர்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் விபத்தில் சிக்கிய ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
பின்னர், இறந்த நபரின் உடல், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது மீட்கப்பட்ட உடல் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த நரேஷ் என்பதும், அந்த நபர் விபத்துக்குள்ளான தனியார் கேஸ் பங்கில் பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பள்ளத்தில் சிக்கியுள்ள மற்றொரு நபரின் உடலைத் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் அந்த நபரின் உடலும் மீட்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீச்சல் தெரியாததால் வெள்ள நீரில் மூழ்கி 17 வயது இளைஞர் உயிரிழப்பு!