Scams on Instagram: சென்னை: கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 98-வது தெருவைச் சேர்ந்தவர் சித்ரா(27). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் மூலம் மகேஷ் குமார்(27) என்பவர் பழக்கமாகியுள்ளார். பின்னர், மகேஷ் குமார் பல வங்கிகளில் கடன் பெற்று தருவதாக கூறி சித்ராவை நம்ப வைத்துள்ளார்.
இதனை நம்பிய சித்ரா, ரூ.3 லட்சம் பணம் மற்றும் நான்கு சவரன் தங்க நகைகளை கொடுத்துள்ளார். நகைகளை கொடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் கடன் பெற்று தராத காரணத்தினால் சித்ரா சந்தேகமடைந்து அவர் கொடுத்த பணம் மற்றும் நகைகளை திரும்பக் கேட்டுள்ளார். மகேஷ் குமார், அதை தருவதாக கூறிக்கொண்டே காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால், சித்ரா கொடுங்கையூர் குற்றப்பிரிவில் தனது நகைகள் மற்றும் பணத்தை மீட்டுத் தருமாறு புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் சித்ரா கொடுத்த ஆவணங்களை சரிபார்த்து விசாரணை நடத்தினர்.
அதன் பேரில் கேளம்பாக்கம் மெயின் ரோடு, அரசு பள்ளி தெரு பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமாரை இன்று (பிப்.12) கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் யார் யாரெல்லாம் கடன் குறித்த தகவல்களை தேடுகிறார்களோ? அவர்களிடம் தான் பல வங்கிகளில் வேலை செய்து வருவதாகக் கூறி, நம்ப வைத்து பல பேரிடம் பணத்தை வாங்கியுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
சித்ராவை போலவே, ப்ரீத்தி என்பவரிடம் ஐந்து சவரன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் பணம் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார். இதேபோன்று, தனக்குத் தெரிந்த பல பேரிடம் ரூ.40 லட்சம் வரை மகேஷ் குமார், மோசடி செய்து பணம் மற்றும் நகைகளை வாங்கி உள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோசடி செய்த பணத்தில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படும் பணத்தை இரட்டிப்பாக்கும் தொழிலில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சில லட்சங்களை தங்கத்தில் முதலீடு செய்து மகேஷ் குமார் நஷ்டம் அடைந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. பல பேரிடம் மோசடி செய்த மகேஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவேன் - சிபி ராதாகிருஷ்ணன்