சென்னை: துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
இதையடுத்து அவருடைய உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று முழுமையாக சோதித்த போது, அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 4 பார்சல்களில், தங்க பசை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 4 பார்சல்களிலும், ரூ. 75 லட்சம் மதிப்புடைய ஒன்றரை கிலோ தங்க பசை இருந்தது. அதை பறிமுதல் செய்து, கடத்தல் பயணியை கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், துபாய் செல்லும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தன. இந்த விமானங்களில், பயணிக்க வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் நிறுத்தி, சோதனை நடத்தி அனுப்பினர். அப்போது சென்னையைச் சேர்ந்த 2 பயணிகள் சுற்றுலாப் பயணிகள் விசாவில் சிங்கப்பூர் மற்றும் துபாய் செல்ல வந்தனர். அவர்கள் இருவரையும் நிறுத்தி சோதித்தனர். அதன் பின்பு அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதித்த போது, 2 பேரின் உள்ளாடைகளுக்குள் கட்டு கட்டாக, வெளிநாட்டு யூரோ உள்ளிட்ட வெளிநாட்டு பணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2 பேரிடம் இருந்தும் ஏறத்தாழ 40 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனஎர். தொடர்ந்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் தொடர்ச்சியாக நடத்திய சோதனையில், அடுத்தடுத்து 3 விமானங்களில், 3 பயணிகளிடம் இருந்து 1 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்புடைய ஒன்றரை கிலோ தங்கம், 40 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: Victoria Gouri: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கெளரியை நியமிக்க ஆதரவு!