சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் வசித்து வரும் நடிகை கெளதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், "திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூர் கிராமத்தில் சுமார் 10.30 ஏக்கர் நிலத்தினை விற்று தருவதாகக் கூறி உதவியாக இருந்த அழகப்பன் என்பவர் மூலம் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பலராமன், செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த ரகுராமன் ஆகியோர் பொது அதிகாரம் பெற்றனர்.
அதன் பிறகு அந்த இடைத்தையும், அருகில் இருந்த எனக்கு சொந்தமான மற்ற இடங்களையும் சேர்த்து கடந்த 2015ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் விற்பனை செய்து, எனக்கு அதில் 4.10 கோடி ரூபாய் பணம் கொடுத்தனர். அதன் பிறகு வருமான வரிதுறையில் இருந்து வந்த நோட்டீஸில், எனக்கு சொந்தமான நிலத்தை 11 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டு, வெறும் 4.10 கோடி ரூபாய் மட்டும் கொடுத்து மோசடி செய்தது தெரியவந்தது.
மேலும் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனக்கு நெருக்கமாக இருந்ததால், அவர்களை நம்பி எனக்கு பல்வேறு இடங்களில் இருக்கும் சொத்துகளையும் கவனித்துக் கொள்ள ஒப்படைத்தேன். ஆனால் அழகப்பன் அவரின் குடும்பத்தினருடன் சேர்ந்து எனது சொத்துக்களை ஏமாற்றி, 25 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது பின்பு தான் தெரியவந்தது" என புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து நில மோசடி புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சியம்மாள் உட்பட ஆறு பேருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆறு முறை சம்மன் அனுப்பியும், இதுவரை அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான மதுரை, சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட ஐந்து இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். மேலும், அதனை நீதிமன்றத்தில் ஒப்படைத்து உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
தற்போது, இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய பலராமன் என்பவரை மட்டும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மற்றவர்களையும் போலீசார் தேடி வரும் நிலையில், இவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லக்கூடாது என்பதற்காக அழகப்பன் மற்றும் அவரது மனைவி நாச்சியம்மாளுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்திருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.
விரைவில் நில மோசடி வழக்கில் தொடர்புடைய அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்படுவார்கள் எனவும் மத்திய குற்றபிரிவு போலீசாரால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சிப்காட் விவகாரம்; வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட விவசாயிகள் விடுதலை!