பல்வேறு நிறுவனங்கள், வணிக வளாகங்களில் கடந்த டிசம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் சேவை மற்றும் வரி புலனாய்வுத் துறை அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது 900 கோடி ரூபாய் வரை, ஜிஎஸ்டி முறைகேடு நடந்திருப்பதாகக் கண்டுபிடித்து உள்ளதாகவும், மேலும் பல நிறுவனங்களில் பொதுமக்களிடம் லோன் வாங்கித் தருவதாகக் கூறி, அவர்களின் ஆவணங்கள் மூலம் ரூ. 152 கோடி வரை உள்ளீட்டு வரிக்கடன் மோசடி செய்திருப்பதாகவும் தெரிய வந்தது.
மேலும் இந்த மோசடியில் மூலக்காரணமாக செயல்பட்ட அடையாளம் தெரியாத நபர்களை சேவை மற்றும் வரி புலனாய்வுத் துறை அலுவலர்கள் கைது செய்தனர்.
இதனையடுத்து இவர்களை விசாரித்தபோது பல்வேறு போலி ஆவணங்களை உருவாக்கி, பொதுமக்களிடம் லோன் வாங்கி தருவதாகக் கூறி, அவர்களின் ஆவணங்களைப் பயன்படுத்தி போலியாக வங்கிக் கணக்குகளை உருவாக்கி, மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
பின்னர் இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கியமான நபர் ஒருவர் வீட்டிலிருந்து 24 லட்ச ரூபாய் கமிஷன் பணத்தைச் சேவை மற்றும் வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் இவரது கூட்டாளியின் அலுவலகத்தில் சோதனையிட்ட போது நூறு போலியான ஆதார் அட்டைகள், கையொப்பமிட்ட காசோலைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் அதிகமாக திண்டிவனம், விழுப்புரம் பகுதிகளில் உள்ள பெண்களிடம் மகளிர் குழு மூலம் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அந்த மூன்று பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்க: புதிய ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் குறித்த கூட்டம்!