சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி இரண்டாம் தேதி வரை 3 தினங்கள் கல்வி துறை சார்ந்த இந்த ஜி 20 கூட்டம் சென்னையில் நடக்கிறது. ஜனவரி 31ஆம் தேதி சென்னை ஐஐடியிலும் பிப்ரவரி 1,2 ஆகிய தேதிகளில் சென்னை தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலிலும் நடக்க இருக்கிறது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தமிழ்நாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளனர். அவர்களை வரவேற்கும் விதத்தில் சென்னை விமான நிலையத்தில் மலர் வண்ணக் கோலங்கள் வரையப்பட்டு, வரவேற்பு பதாகைகளும் விமான நிலையத்தின் உள்பகுதியிலும், வெளிப்பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளன.
அந்த வரவேற்பு பதாகைகளில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. அந்த வரவேற்பு பதாகைகளில் ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்று தமிழில் எழுதப்பட்டுள்ளது. அதோடு பிரதமர் மோடியின் படம் மட்டுமே அந்த வரவேற்பு பதாகையில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கூட்டம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 3 தினங்கள் நடக்க இருக்கிறது. அத்தோடு விமானங்களில் இறங்கி வரும் வெளிநாட்டு பிரதிநிதிகளை சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் காவல்துறையான முக்கியப் பிரமுகர்களின் செக்யூரிட்டி போலீஸ் அதிகாரிகளும், தமிழ்நாடு அரசு விருந்தினர் வரவேற்பு துறையான, புரோட்டா கால் அதிகாரிகள் என தமிழ்நாட்டு அதிகாரிகள் தான் அழைத்து வந்து விமான நிலையத்தில் இருந்து தகுந்த பாதுகாப்புடன் அவர்களை தங்கும் இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
ஆனால் சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள வரவேற்பு பதாகைகளில் ஒன்றில் கூட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பெயரோ அல்லது புகைப்படமோ இடம்பெறாமல் இருப்பது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வரவேற்பு பதாகைகள் அனைத்தும் ஜி 20 மாநாட்டு குழுவால் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பதாகைகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் அம்மா வீட்டுக்கு வந்த நடிகை ஹன்சிகா... என்ன காரணம்?