சென்னை: 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 2022, கடந்த மாதம் 28 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 186 நாடுகளில் இருந்து வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் 30 வீரர்கள் பங்கேற்றனர். இதன் நிறைவு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 9) நடைபெற்றது.
இதில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “ஈராயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சங்க இலக்கியப் பாடலில் கணியன் பூங்குன்றனார், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றார். அத்தகைய உலகளாவிய உடன்பிறப்புணர்வோடுதான் தமிழ்நாடு அரசு இந்தப் பெருமைமிகு போட்டியை நடத்தியுள்ளது.
அரசு அலுவலர்களுக்கு நன்றி: இங்கு வருகை தந்த செஸ் விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும், தமிழ்நாடு அரசின் சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வசதிகள் குறித்து சமூக ஊடகங்களில் பாராட்டி நன்றி தெரிவிக்கும்போது நான் அடையும் மனமகிழ்ச்சிக்கு இணையானது எதுவுமில்லை. போட்டியில் வெற்றி பெற்றவர்களை விட, நான் அதிகமான மகிழ்ச்சியில் இருக்கிறேன்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த திட்டமிட்ட உடனேயே, அதற்காக 102 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. மேலும் இதற்காக 18 துணைக் குழுக்களை உருவாக்கியது. நான்கே மாதங்களில் பன்னாட்டுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்தது.
உலகமே வியக்கும் அளவுக்கு போட்டியை நடத்தி முடித்துவிட்டோம்.இதற்கு காரணமான, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், இத்துறையைச் சேர்ந்த செயலாளர் அபூர்வா, அவருக்கு துணை நின்ற அரசு மற்றும் அரசு அலுவலர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன்.
ஒலிம்பிக் தங்க வேட்டை: உங்களிடம் தரப்பட்ட பணியை மிக மிகச் சிறப்பாகச் செய்துள்ளீர்கள். உங்களது திறமையும், செயலும் தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய பெருமையை ஏற்படுத்தித் தந்துள்ளது. என் அன்புக்குரிய வீரர்களே, சென்னையில் உங்களுக்கு செய்து தரப்பட்ட ஏற்பாடுகளும், இங்கு கழித்த நாட்களும் உங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும் என்று உளமார நம்புகிறேன்.
உங்களது நாடு, பண்பாடு, மரபு குறித்து நாங்கள் அறிந்து கொள்ளவும் இது ஒரு சிறப்பான நல்வாய்ப்பாக அமைந்தது. செஸ் போட்டியில் பங்கேற்ற நினைவுகளுடன், இம்மண்ணின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் உணவின் சுவை ஆகியவற்றையும் நீங்கள் திரும்பிச் செல்கையில் உங்களுடன் கொண்டு செல்வீர்கள் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.
தமிழ்நாட்டை விளையாட்டில் ஒரு முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு ‘திராவிட மாடல்’ அரசு பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் பதக்கங்கள் வெல்வோரை உருவாக்கும் பொருட்டு ‘ஒலிம்பிக் தங்க வேட்டை’ என்ற திட்டம் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
உலக அளவிலும் தேசிய அளவிலும் பதக்கங்கள் வென்று, நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை தேடித் தரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு தனிக்களம்: அந்த வகையில், கடந்த ஓராண்டில் 1,073 விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் 26 கோடியே 85 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிகமான நிதிக் கொடைகள் செஸ் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன கருவிகள் மற்றும் பயிற்சி வசதிகளை அளிப்பதற்கான திட்டத்தைப் பெரிய அளவில் விரிவுபடுத்த உள்ளோம்.
இதன்படி 50 விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளில் அவர்களை மெருகேற்ற 60 கோடி ரூபாய் செலவு செய்யப்படும். இதேபோல் கராத்தே, ஸ்குவாஷ், துப்பாக்கி சுடுதல், டோக்கியோ ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக், வாள் சண்டை போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்களுக்கும் சிறப்பு நிதியுதவி செய்யப்பட்டுள்ளது.
ஒருவரின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் விளையாட்டு மிக முக்கிய பங்காற்றுகிறது என்பதை தமிழ்நாடு அரசு நன்கு உணர்ந்துள்ளது. வட சென்னையிலும், கோபாலபுரத்திலும் குத்துச்சண்டை அகாடமிகள் நிறுவப்பட உள்ளன. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதலுக்கு, பிரம்மாண்டமாக தனி விளையாட்டு களம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.
முதலமைச்சர் கோப்பை: அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. சென்னை ஓப்பன் டென்னிஸ் தொடரையும், ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டிகளையும் சென்னையில் நடத்தவும் நாங்கள் முனைப்போடு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்பதையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழ்நாட்டை உலகளாவிய விளையாட்டு மையமாக உயர்த்துவதற்கு நாங்கள் தொடர்ந்து முயல்வோம். 12 ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் கபடி, சிலம்பாட்டம் ஆகிய இரண்டு பாரம்பரிய விளையாட்டுகளுக்காக மாநில மற்றும் மாவட்ட அளவிலான "முதலமைச்சர் கோப்பை"க்கான விளையாட்டுப் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது என்பதையும் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் வழியாக புதிய திறமைசாலிகள் அடையாளம் காணப்பட்டு, பல இளைஞர்கள் விளையாட்டைத் தங்கள் பாதையாகத் தேர்ந்தெடுக்க உதவும். நவீன தேவைகளுக்கு ஏற்ப நம்முடைய விளையாட்டு உள்கட்டமைப்பை புதுப்பிக்க உள்ளோம். அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு வளர வேண்டும் என்று உழைத்து வருகிறோம்.
அதில் விளையாட்டுத் துறையும் முக்கியமானது என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். வெற்றி பெற்ற வீரர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். அடுத்தடுத்த ஆண்டுகளில் வெற்றி பெறப் போகும் வீரர்களுக்கும் எனது வாழ்த்துகள். எதிலும் வெற்றி - தோல்வி முக்கியமல்ல; பங்கேற்பு தான் முக்கியமானது.
மீண்டும் வருக: இந்த பங்கேற்பு ஆர்வத்தை எப்போதும் விட்டுவிடாதீர்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். எனதருமை வீரர்களே, நீங்கள் அனைவரும் உலக அளவில் தமிழ்நாட்டின் தூதுவர்களாக விளங்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த இனிய வேளையில், பன்னாட்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை சென்னையில் நடத்தும் வாய்ப்பினை வழங்கியமைக்காக பன்னாட்டு செஸ் கூட்டமைப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகக் குறுகிய காலத்தில் இத்தகைய மாபெரும் போட்டியை நடத்திக் காட்டக் காரணமாக அமைந்த தமிழ்நாடு அரசைச் சேர்ந்த அலுவலர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். மேலும், இப்போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் பெரும் பங்காற்றிய அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் அலுவலர்களுக்கும் எனது நன்றி.
அடுத்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த இருக்கும் புதாபெஸ்த் நகருக்கு என் வாழ்த்துகள். என் அன்புக்குரிய பன்னாட்டு வீரர்களே, நீங்கள் அனைவரும் மீண்டும் சென்னைக்கு வருகை தர வேண்டும்” என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் போட்டி: இந்திய அணியின் 11 ஆம் சுற்று முழு விவரம்