கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சாலையோரம் ஆதரவற்று வசிக்கும் முதியோர், ஏழை மக்கள் என பலரும் உணவின்றி தவித்து வந்தனர். இவர்களுக்கு நகராட்சி மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் தினமும் உணவு தயாரித்து மூன்று வேளையும் வழங்கப்பட்டது.
தற்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு அரசு வழக்கத்தை விட இந்த முறை ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடித்து வருகிறது.
இதையடுத்து, நேற்று (ஜூன் 18) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த முழு ஊரடங்கால், முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையோரம் வசித்துவரும் ஏழை-எளிய மக்களுக்கு உணவு ஏதும் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் தங்கியிருந்த 70 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற முதியவர் சின்னபையன் என்பவர், இரண்டு நாட்களாக யாரும் உணவு வழங்காததால் இன்று (ஜூன் 19) அதிகாலை பேருந்து நிலையத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள், முதியவர் இறந்து கிடந்ததைப் பார்த்தும் கண்டும் காணாமல் இருந்துள்ளனர்.
மேலும், அவரது உடலை அப்புறப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.