சென்னை சூளைமேடு மத்திய பள்ளி சாலை கில் நகர் பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் வசித்து வரும் தம்பதியினர் ஜீவன் (80), தீபா (70). இவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக அதே அப்பார்ட்மெண்டில் குடியிருந்து புரசைவாக்கத்தில் சொந்தமாக தையல்கடை நடத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று கூறப்படுகிறது.
கடந்த வாரம் சுகாதாரத் துறை அலுவலர்கள் இவர்களுக்கு கரோனா சோதனை செய்ய வந்துள்ளனர். ஆனால் இவர்கள் அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் அனுப்பி விட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் இன்று காலை தம்பதிகள் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகிலிருந்த பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
![old couple found dead in chennai gill nagar apartment](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7342322_thum.jpg)
இந்த தகவலின் அடிப்படையில் சூளைமேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது தம்பதியினர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இருவரின் உடல்களும் அழுகிய நிலையில் இருந்துள்ளது. தம்பதியினர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்திருக்கக் கூடும் என சந்தேகத்தின் பேரில் சுகாதாரத் துறை அலுவலர்கள் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
இதையும் படிங்க... தலை இல்லாமல் எரிந்து கிடந்த இளைஞரின் உடல்