சென்னை திருவெற்றியூர் திருச்சிணாங்குப்பம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வாழ்ந்துவருகின்றனர். இந்த குடியிருப்பு அருகே உள்ள தனியார் எண்ணை நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் சமையல் எண்ணெய் கொண்டுவந்து சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்து, அங்கிருந்து பைப் வழியாக சமையல் எண்ணை ராட்சத டேங்கர் மூலம் சேமித்து வைக்கப்படுகிறது.
ராட்சத டேங்கரில் இருந்து கசியும் எண்ணையானது பூமிக்கு அடியில் சென்று நிலத்தடி நீரில் கலந்துவிடுகிறது.
இந்நிலையில் மீனவர்கள் தங்களது வீடுகளில் இருந்து மின்மோட்டார் மூலம் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்தியபோது தண்ணீரில் சமையல் எண்ணெய் படிந்து, தண்ணீரின் நிறம் மாறி இருப்பது தெரியவந்தது. இதனால் நிலத்தடி நீர் பயன்படுத்துபவர்களுக்கு சரும நோய்கள் வருவதாகவும், பெண்களுக்கு தலைமுடி கொட்டுவதாகவும் அங்கு வசிக்கும் பெண்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பல முறை மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் வேதணை தெரிவித்தனர். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்போவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.