சென்னை: தாய்லாந்தில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று (நவ.12) நள்ளிரவு வந்த தாய் ஏர்வேஸ் (Thai Airways) பயணிகள் விமானத்தில் பெரும் அளவு போதைப் பொருள் கடத்தப்பட்டு வரப்படுவதாக சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனையடுத்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படையினர், அந்த குறிப்பிட்ட விமானத்தில் வந்த பயணிகளை ரகசியமாக கண்காணித்துள்ளனர். அப்போது, சென்னையில் வசிக்கும் வட மாநில இளைஞரான ஜான் ஜூட் தவாஸ் (32) என்பவர், சுற்றுலாப் பயணிகள் விசாவில் தாய்லாந்து நாட்டிற்கு சென்று சென்னை திரும்பியுள்ளார்.
அவர் மீது மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, அந்த பயனியை நிறுத்தி விசாரித்துள்ளனர். அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதை அடுத்து, அவரை சென்னை விமான நிலைய சுங்க துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், அவரைத் தீவிரமாக சோதித்துள்ளனர்.
அப்போது, அந்த நபரின் கைப்பை உட்பட அவருடைய உடைமைகள் அனைத்தையும் பரிசோதித்தனர். அப்போது கைப்பைக்குள் ரகசிய பிரிவு இருப்பதை கண்டுபிடித்த அதிகாரிகள், அந்த ரகசிய பிரிவை திறந்து பார்த்தபோது, அதில் மொத்தம் 3.6 கிலோ ஹெராயின் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.25 கோடி என கூறப்படுகிறது.
அதன் பின்னர், தாய்லாந்திலிருந்து ஹெராயின் கடத்தி வந்த ஜான் ஜூட் தவாஸ் என்பவரை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு துறையினர், சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்களுடைய அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர் போதைப் பொருளை யாருக்காக கடத்தி வந்தார்? இவரை அனுப்பிய சர்வதேச போதை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் யார்? இவர் இதற்கு முன்பு இதை போல் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளாரா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போதைப் பொருளை ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, தாய்லாந்து வழியாக சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒரே சமயத்தில் ரூ.25 கோடி ரூபாய் மதிப்புடைய ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வித்தியாசம் வித்தியாசமா கடத்துறாங்கப்பா... திருச்சி விமான நிலையத்தில் ஜீன்ஸ் பேண்டில் கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல்!