சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால் கனமழையை நாம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு நாம் பெருமழையைச் சந்தித்தோம். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நமக்கெல்லாம் மிகப்பெரிய சவாலாக அமைந்திருந்தது. இதேபோல் மற்ற சில மாவட்டங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
மீண்டும் அதேபோன்ற ஒரு நிலை எங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று முடிவெடுத்து, அதற்கான வழிமுறைகளை அரசுக்கு எடுத்துரைக்க மரியாதைக்குரிய திருப்புகழ் அவர்களின் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டு, அவர்கள் அளித்த ஆலோசனையின்படி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இம்முறையும் மழைநீர் தேங்காதவாறும், வெள்ளம் ஏற்படாதவாறும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது அனைத்து மாவட்ட நிர்வாகத்தினுடைய கடமையும் பொறுப்பும் ஆகும். அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பேரிடர் காலங்களில் மக்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய முக்கிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்திற்குத்தான் இருக்கிறது. இதனை உங்களது சார்நிலை அலுவலர்கள் அனைவருக்கும் நீங்கள் உணர்த்தி செயல்பட வைக்க வேண்டும்.
குறிப்பாக, மக்களுக்கு நேரடி சேவை வழங்கும் துறைகளில் நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்க வேண்டும்; மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கைப்பேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே மீட்டு, நிவாரண மையங்களில் பாதுகாக்க அதற்குரிய ஏற்பாடுகளை நீங்கள் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்க வேண்டும். பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும்போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
பழுதடைந்த / பலவீனமான சுற்றுச் சுவர்களை அப்புறப்படுத்த வேண்டும். வயல்வெளிகளில் பயிர் சேதம் ஏற்படாத வகையில் மழைநீர் வடிவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்குதல், பால் விநியோகம் மற்றும் மின்சாரம் வழங்கல், சமுதாய உணவுக்கூடம், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.
கரையோரப் பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் முன்னதாகவே அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். மாநகர மற்றும் நகராட்சிப் பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் மற்றும் அது தொடர்புடைய பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.
மழைக்காலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்களும், வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை, தீயணைப்புத் துறை, வேளாண் துறை ஆகிய பல்வேறு துறை அலுவலர்களும் தனித்தனியாக இயங்காமல், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றக் கோரிய வழக்கில் உத்தரவு