சென்னையில் மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் நடைபெறுவதைத்தடுக்க காவல் துறையினர், குற்றவாளிகளைக் கைது செய்தும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகின்றனர். இருந்தும் சென்னையில் பல மசாஜ் சென்டர்களில் காவல் துறை லஞ்சம் வாங்கிக்கொண்டு, அவர்களுக்கு தெரிந்தே பாலியல் தொழில் நடத்தப்படுவதாக அறியப்படுகிறது.
அதற்குச் சான்றாக இடைத்தரகர்கள், விபச்சார தடுப்புப் பிரிவு அலுவலர்களின் கெடுபிடிகளை சமாளித்து, கண்டும் காணாதது போல் இருக்க, ஒரு மையத்திற்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை மாதந்தோறும் விபச்சார தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு லஞ்சமாக கொடுப்பது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில், சென்னை விபச்சார தடுப்புப்பிரிவில் பணிபுரியும் காவலரான ஜெ.பி என்வருக்கு, மாதம் தவறாமல் மாமூல் பணத்தை கொடுத்து வருவதாக அந்த இடைத்தரகர் பேசியுள்ளார். மேலும், பாலியல் தொழில் தடையின்றி நடக்க, மசாஜ் மையம் நடத்தும் உரிமையாளர் மற்றும் இடைத்தரகர்களிடம் இருந்து பணம் பெறுவதைப் பார்த்தால் மசாஜ் மையம் எனப்பெயரை பயன்படுத்தி, சென்னையில் பாலியல் தொழில் தங்கு தடையின்றி நடந்து வருவது நிரூபணமாகிறது.
இந்த ஆடியோ ஆதாரத்தை அடிப்படையாக வைத்து விபச்சார தடுப்புப்பிரிவு அலுவலர் ஜெ.பியிடம் காவல் துறை உயர் அலுவலர்கள் துறைரீதியான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆடியோ மூலம் பாலியல் தரகர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு உடந்தையாக செயல்படுவது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த 2018ஆம் ஆண்டில், சென்னை காவல் துறையின்கீழ் செயல்படும் விபச்சார தடுப்புப்பிரிவில், ஆய்வாளர்களாக பணிபுரிந்த சாம் வின்சென்ட் மற்றும் சரவணன் ஆகியோர் சென்னையில் பாலியல் தொழில் தங்கு தடையில்லாமல் நடக்க தரகர்களிடம் பணம் பெற்றதாகத்தெரிகிறது.
இதனால், லஞ்ச ஒழிப்புத்துறையினருக்குக் கிடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு ஆவணம் கைப்பற்றப்பட்டு, ஆய்வாளர்கள் இருவர் மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்த நிலையில் இருவரும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் தொழிலதிபர் கடத்தல் வழக்கு.. பெண் மருத்துவர் மற்றும் 6 பேர் கைது...