கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில் உள்ள சுயம்பு ஆண்டவர் கோயிலில் டிசம்பர் 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க கோரி திண்டுக்கலை சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ’சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோயிலில் கார்த்திகை தீபத்தின்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் பல ஆண்டுகளாக எந்த இடையூறும் இல்லாமல் தீபம் ஏற்றி வந்த நிலையில், தற்போது கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபாடு நடத்த வனத்துறை அனுமதி வழங்கவில்லை’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கோயம்புத்தூரைச் சேர்ந்த செந்தில் குமார் தரப்பில், தீபம் ஏற்ற வருபவர்கள் வனப்பகுதியில் தங்குவதால் காடுகள் அழிக்கப்படுவதாகவும், தீபம் ஏற்றுவதால் வனவிலங்குகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகும் என்பதால் வெள்ளியங்கிரி மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்கக்கூடாது எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதேபோல், வனத்துறை சார்பிலும், வெள்ளியங்கிரியில் உள்ள சுயம்புலிங்க கோயிலுக்கு பக்தர்கள் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் அங்கு தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வெள்ளியங்கிரி மலையில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பரமேஸ்வரன் கோயில் வெடி விபத்துக்கான இழப்பீடு கோரிய வழக்கு - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!