ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தமிழ்நாடு காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணிக்காக கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு அதன்பின் நேர்முகத்தேர்வு என்று மூன்று கட்டங்களாக நடைபெறும்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி நடந்த எழுத்துத் தேர்வில் 70 மதிப்பெண்களுக்கு 51 மதிப்பெண்கள் பெற்றேன். நேர்முகத் தேர்வு நடை பெற உள்ளது. 1.2 வீதம் அழைக்கப்பட்டனர். எம்.பி.சி., பிரிவுக்கு 64 கட் ஆப் மார்க் ஆக உள்ளது. நான் 63 மதிப்பெண் பெற்றுள்ளேன். ஆனால், தமிழ் வழியில் படிப்புக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் என்னை அழைத்திருந்தால் நானும் நேர்முகத்தேர்வுக்கு சென்றிருப்பேன்.
அவ்வாறு என்னை அழைக்கவில்லை. தமிழ் வழியில் படித்ததற்கான ஒதுக்கீடு இங்கு முறைப்படி செயல்படுத்தவில்லை. எனவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போன்று சார்பு ஆய்வாளர் தேர்வில் ஒவ்வொரு நிலையிலும் எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு , நேர்முகத் தேர்வு என்ற ஒவ்வொரு நிலையிலும், தமிழ் வழியில் படித்தோருக்கான இட ஒதுக்கீட்டு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தமிழ் வழியில் படித்தோருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் முறைப்படி தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும். அதுவரை தேர்வு செய்து கடந்த 1ஆம் தேதி வெளியிட்ட உத்தேச தேர்வு பட்டியலுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கு, எம்.எம். சுந்தரேஷ், மற்றும் ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், முன்னுரிமை வழங்க வேண்டும் என்று தான் உள்ளது. இது இட ஒதுக்கீடு இல்லை. 2015ஆம் ஆண்டு இது போன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அறிவிப்பாணையில், இறுதிகட்ட தேர்வில் தான் முன்னுரிமை வழங்க வேண்டும் என தெளிவாக கூறியுள்ளது என தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் 5 விழுக்காடு பேர் கூட தேர்வு செய்யப்படவில்லை. எதிர்காலத்தில் இடைமட்ட நிலையில் உள்ள அனைத்து நிலையிலும் பின்பற்ற முயற்சிக்கலாம். தற்போது தேர்வு நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எஸ்.ஐ. தேர்வுக்கான சுற்றறிக்கையை ஏற்று தான் மனுதாரர் விண்ணப்பித்துள்ளார்.
மனுதாரரே அந்த அறிவிப்பாணையை ரத்த செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய முடியாது. இருந்தாலும், டிஎன்பிஎஸ்சி எந்த முறையில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இட ஒதுக்கீடு எந்த முறையில் பின்பற்றப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: 'தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி கூடாது'