சென்னை: பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "எம்.ஜி ஆர்., ஜெயலலிதா உயிரை கொடுத்து 50 ஆண்டு காலம் அதிமுகவை காப்பாற்றியுள்ளதாக கூறிய அவர், அவர்கள் வகுத்து கொடுத்த சட்ட விதியை காப்பாற்ற போராடி வருவதாகவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றியதை ரத்து செய்ய யாருக்கும் உரிமை இல்லை எனவும் குறிப்பிட்டார்.
கூவத்தூரில் நடந்தது போல், கட்சியை கைப்பற்ற வேண்டும் என நினைக்கிறார்கள் என குற்றம்சாட்டிய அவர், அதிமுக தொண்டர்களால் உருவான கட்சி எனவும், மக்கள் மன்றத்தை நாடி செல்ல படை புறப்பட்டு விட்டதாகவும் எனவும் அவர் தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை எனவும், இந்த தீர்ப்பிற்கு பின் தான் தொண்டர்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள் என்றும் கூறிய அவர், சுற்றுப்பயணம் உறுதியாக விரைவில் தொடங்கும் என்றும், மாவட்டம் வாரியாக மக்களை சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தான் திமுகவின் A-Z டீம் என கூறிய ஓ.பி.எஸ், ஆயிரம் ரகசியம் இருக்கிறது, ஒவ்வொன்றாக வெளியில் வரும் என்றும், என்னையும், சசிகலாவையும் அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என இ.பி.எஸ் கூறுகிறார் இது அவர் தாத்தா ஆரம்பித்த கட்சியா? என கேள்வி எழுப்பி அவர், ஆணவத்தின் உச்சத்தில் இ.பி எஸ் உள்ளதாகவும் விமர்சித்தார்.
இனி தீர்ப்பை எங்கு பெற வேண்டுமோ அங்கு சென்று பெறுவோம் என கூறிய அவர், கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன் என்றும், மார்ச் மாதம் இறுதிக்குள் முப்பெரும் விழா நடத்தப்படும் எனவும் உறுதிப்பட தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தமிழ் இனி மெல்ல சாகும்" - மருத்துவர் ராமதாஸ்!