சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர், அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி வருவதாலும், அதற்கு தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
மேலும் அதில், அதிமுக பொதுச் செயலாளராக தன்னை தேர்தல் ஆணையமும், உயர் நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் தொடர்ந்து கூறி வருவது தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய தொடர்ந்து 3வது முறையாக அவகாசம் கேட்டதால், அதிருப்தி அடைந்த நீதிபதி என்.சதீஷ்குமார், பொதுச் செயலாளர் தேர்தல் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இதுவரை இடைக்கால தடை உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்பதால், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
மேலும், வழக்கு குறித்து நவம்பர் 30ஆம் தேதிக்குள் ஓபிஎஸ் பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பி.ராஜலட்சுமி முறையீடு செய்தார்.
அதனை ஏற்ற நீதிபதிகள், மேல்முறையீட்டிற்கான மனுத் தாக்கல் நடைமுறைகள் முடிந்தால், நாளை (நவ.10) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு வார காலமாக சிங்கப்பூருக்குச் சென்று இன்று (நவ.09) சென்னை திரும்பிய ஓபிஎஸ்-க்கு, சென்னை விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பளித்தனர்.
அதைத் தொடர்ந்து, வழக்கமாக ஓபிஎஸ் பயன்படுத்தும் காரில், அவர் அதிமுகவின் கட்சிக் கொடி இல்லாமல் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்திற்குச் சென்றார். மேலும், தனது அரசியல் வாழ்வில் முதன் முறையாக அதிமுக கட்சிக் கொடி இன்றி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீடு, இரு நீதிபதி அமர்வுக்கு விசாரணைக்காக வரவுள்ளது.
இதையும் படிங்க: இறந்த சகோதரி உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற சகோதரர்..! ஆம்புலன்ஸ் இல்லாததால் நேர்ந்த அவலம்..