சென்னை: பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்ற வாக்குறுதி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பக்கம்-57-ல் 181-வது வரிசை எண்ணில் இடம் பெற்றுள்ளது. ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இந்த வாக்குறுதி குறித்து முதலமைச்சர் அவர்கள் மவுனம் சாதிப்பது "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே" என்ற புரட்சித் தலைவரின் பாடல் வரிகளைத் தான் நினைவுபடுத்துகிறது.
தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் பல ஆண்டுகளாக இளைஞர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாததாக விளங்கும் உடற்கல்வி, ஓவியம், தையல், கட்டடக் கலை, தோட்டக் கலை, இசை, வாழ்வியல் திறன் போன்றவற்றை போதிக்கும் உன்னதமான பணியை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற சிறப்புப் பாடங்கள் மாணவ, மாணவியர் தங்களுடைய தனித் திறமையை தங்களுக்கு விருப்பமான பாடங்களில் வளர்த்துக் கொள்ள வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், வேலை வாய்ப்பினைப் ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், உருவாக்கிக் கொள்வதற்கும் பெரிதும் உதவும்.
நிரந்தரப் பணியில் உள்ள ஆசிரியர்கள் மேற்கொள்கின்ற அதே பணியை பகுதி நேர ஆசிரியர்கள் பல ஆண்டுகள் மேற்கொண்டு வந்தாலும், அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் வெறும் பத்தாயிரம் ரூபாய்தான். தங்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாக உள்ளதாக பகுதி நேர ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள் அனைவருமே வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றவர்கள்.
தற்போது மின் கட்டணம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், சொத்து வரி காரணமாக வீட்டு வாடகை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பால், தயிர், வெண்ணெய், நெய் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கின்ற நிலையில், அரசு அளிக்கும் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தை வைத்துக் கொண்டு தங்களுடைய குடும்பத்தை காப்பாற்ற முடியாத அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப நிரந்தரம் செய்வது குறித்தோ, அவர்களுடைய சம்பளத்தை உயர்த்துவது குறித்தோ, அவர்களுக்கு இதர சலுகைகள் அளிப்பது குறித்தோ அரசு நடவடிக்கை எடுக்காதது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, பகுதி நேர ஆசிரியர்களின் பணியை நிரந்தரம் செய்யவும், அவர்களின் அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றவும் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுக அரசு மீது அதிருப்தி.. போராட்டத்தில் குதிக்கும் அரசு ஊழியர்கள்!