சென்னை திருவொற்றியூரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மொழிப்போர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மாதவரம் வீ.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின், அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மொழிப்போர் போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
பின்னர் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "எப்பொழுதும் தமிழ்நாட்டின் தீய சக்தி திமுக. திமுகவை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகதான் எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார்.
தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும் ஜெயலலிதாவின் திட்டங்கள் நிறைந்து காணப்படுகிறது. அதிமுகவின் சாதனைகளால்தான் அதிமுக கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது வரவேற்பு அதிகமாக காணப்படுகிறது. மீண்டும் அதிமுக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என அதிமுக தொண்டர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிற்கு கேடு விளைவிக்கும் திட்டங்களை ஆட்சியாளர்களாக இருந்தபோது திமுக தலைவர் ஸ்டாலின் தடுத்தாரா, நீட் தேர்வு, அரசு மருத்துவக் கல்லூரி என எவற்றையும் திறம்பட கையாளவில்லை.
திமுக தலைவர் ஸ்டாலின் தன்னை காந்தி என நினைத்துக்கொண்டு கிராம சபை கூட்டம் நடத்திவருகிறார் என குற்றஞ்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது. தவறான வழியை பின்பற்றும் திமுகவால் ஆட்சி மாற்றம் எந்த காலத்திலும் ஏற்படாது. நல்லாட்சியை தரமுடியாத ஆட்சியை நடத்திவிட்டு மீண்டும் ஆட்சிக்கு வர பரிதவிப்பது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், அதிமுகவின் கடைசி தொண்டன் வரை திமுக ஆட்சிக்கு வருவதை தடுப்பார்கள்" என்றார்.