சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் பொருளாளர் பேயத்தேவன் கூறும்போது, "முன்னாள் முதலமைச்சர் காமராஜ் சென்னையில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. 1982-ல் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஆட்சியின்போது சத்துணவு திட்டம் தொடங்கப்பட்டது. 1989-ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சத்துணவு திட்டத்தில் முட்டை வழங்க உத்தரவிட்டார்.
சத்துணவுத்திட்டம் கல்வியறிவு விகிதத்தை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 42 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தினால் பயன்பெற்று வருகின்றனர். கரோனா தொற்றுக்கு பின் 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அரிசி, பருப்பு மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளது. உப்பு, எண்ணெய், கொண்டக்கடலை, பாசிப்பயிறு, காய்கறி வாங்க பணம் இதுவரை அரசு வழங்கவில்லை. இந்நிலையில் நவம்பர் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
விறகு அடுப்பிற்கு பதிலாக அனைத்து பள்ளிகளிலும் கேஸ் சிலிண்டரை பயன்படுத்த அரசு உத்தரவிட்டது. 700 மாணவர்களுக்கு உணவு தயாரிக்க ஒரு கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கேஸ் சிலிண்டருக்கு ரூ.350 பணத்தை மட்டுமே அரசு வழங்குகிறது. தற்போது கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,025 ஆக உயர்ந்ததால் மீதி பணத்தை சத்துணவு ஊழியர்கள் தங்களது சொந்த செலவில் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சத்துணவு மையங்களில் 20 ஆயிரத்துக்கும் மேல் பணியிடங்கள் காலியாக உள்ளது. புதிய நியமனங்கள் செய்தால் மட்டுமே சத்துணவு மையங்களை முறையாக நடைமுறைப்படுத்த முடியும்.
சத்துணவு ஊழியர்களுக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சத்துணவு மையங்கள் முறையாக செயல்படுவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 'முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது' - துரைமுருகன்