திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறிவிழுந்தது. தவறி விழுந்த குழந்தையை மீட்க மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிர முயற்சி செய்துவருகின்றனர்.
நேற்று மாலை 5.40 மணியிலிருந்து தொடரும் மீட்புப் பணி 23 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது. 80 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுவரும் சூழலில், இன்னும் ஒன்றரை மணி நேரத்தில் குழந்தை மீட்கப்படும் என்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஆழ்துளைக் கிணறு அருகே சுரங்கம் போன்ற குழி தோண்டி குழந்தையை மீட்க மீட்புக் குழுவினர் கடைசிகட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். தவிக்கும் குழந்தை மீண்டு வர வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. நம்பிக்கையுடன் மக்களும் காத்திருக்கின்றனர். குழந்தையை நினைத்து வருந்திவரும் சுர்ஜித்தின் தாயாருக்கு அரசியல் தலைவர்களும் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், குழந்தை சுர்ஜித் குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "குழந்தை சுர்ஜித்தின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அவன் நலமுடன் மீட்கப்பட வேண்டும். கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் கண்டறியப்பட்டு அவை மூடப்பட வேண்டும். இந்தப் பணியில் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது மக்களாகிய நம் கடமை. #SaveSurjith" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், #SaveSurjith, #pray #prayforsurjith என்ற ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரெண்டாகிவருகிறது. குழந்தையின் உயிரைக் காக்க இந்திய மக்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.