சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனைக் குறைப்பதற்கு அந்தந்தப் பகுதிகள் முழுவதிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தவிர, மக்களுக்கு தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
இருப்பினும், அண்ணா நகர், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் பெருந்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடம்பாக்கத்தில் 19 ஆயிரத்து 305 நபர்களும், அண்ணா நகரில் 19 ஆயிரத்து 188 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மண்டலங்களுக்கு அடுத்தபடியாக தேனாம்பேட்டையில் மற்றும் ராயபுரத்தில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தேனாம்பேட்டையில் 16 ஆயிரத்து 490 நபர்களும், ராயபுரத்தில் 16 ஆயிரத்து 216 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்று அதிகரித்து வருவதால் தற்போது கரோனா பரிசோதனைகளையும் மாநகராட்சி அதிகரித்து வருகிறது.
நேற்று (அக்.,4) மட்டும் 13 ஆயிரத்து 526 பரிசோதனைகளை மாநகராட்சி செய்துள்ளது. நோய்த் தொற்று அதிகரித்து வந்தாலும்கூட குணமடைந்தோரின் விழுக்காடு 91ஆகவும் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் விழுக்காடு ஏழாகவும் உள்ளது மக்களிடையே சிறிது ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரையிலும் சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 773 பேர் இந்த கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 216 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 12 ஆயிரத்து 283 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 3 ஆயிரத்து 274 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர்.