சென்னை: நந்தனத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணுவை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். பின்னர், சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ஐயா நல்லகண்ணு மீது நான் மட்டுமல்லாமல் அனைவரும் பேரன்பும் பெருமதிப்பும் கொண்டுள்ளனர். இயல்பாய் நடைபெற்ற சந்திப்பு தான் இது. எங்களைப் போல நபர்களுக்கு ஐயா ஒரு பெரிய முன்மாதிரியும் வழித்தடம்மாய் இருக்கிறார்.
அவர் வாழ்ந்த காலங்களில் நாங்கள் வாழ்ந்துள்ளோம் என்பதையே பெருமைக்குரியதாய் கருதுகிறோம். இந்த காலத்தில் கட்சியின் கொடுத்த வீட்டையும், காரையும் திருப்பி கட்சிக்கு அளித்த அரசியல்வாதியை கனவில் கூட பார்க்க முடியாது. அமைச்சர் செந்தில் பாலாஜி அனைத்திலும் சரியாக இருக்கின்றார் என்றால் சோதனைக்கு அனுமதிக்க வேண்டும். ஆனால், தற்போது சோதனை செய்பவர்களை தடுப்பது ஏதோ தவறு இருப்பது போல் தோற்றமளிக்கிறது. எதுவும் இல்லை என்றால் திறந்து காட்ட வேண்டியது தானே.
பாஜக அரசும் அதன் கூட்டணி கட்சிகளும் காங்கிரஸ் அரசும் அதன் கூட்டணி கட்சிகளும் மாறி மாறி அரசியல் நோக்கத்துடன் கட்சியின் தலைவர்கள் வீட்டில் சோதனைகள் செய்வது வாடிக்கையாய் இருக்கிறது. வருமான வரி சோதனைகளில் எவை கையகப்படுத்தப்பட்டன எவ்வளவு ரொக்கம் மற்றும் எவ்வளவு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என பட்டியலை சோதனை செய்தவர்கள் ஏன் எப்போதும் வெளியிடுவதில்லை. சோதனை செய்யும் இடங்களில் 10 விழுக்காடு கமிஷன் பெற்றுக் கொண்டு அதிகாரிகள் விவரங்களை வெளியிடுவதில்லை.
வருமான வரி சோதனைகளில் கையகப்படுத்தப்படும் ரொக்கம் மற்றும் ஆவணங்களில் 10 விழுக்காடு சோதனையாளர்களிடம் கொடுத்து விட்டால் சோதனை ரத்து செய்யப்படுவதாகவும் ஆவணங்கள் வெளியிடப்படுவதில்லை எனவும் தனக்கு நெருக்கமான நபர்கள் வீட்டில் சோதனை நடத்திய போது இது போன்று நடந்தது. அமலாக்கத் துறைக்கு தான் அனைவரும் அஞ்சுகிறார்கள், வருமானவரித்துறை சோதனை என்பது வெறும் கண் துடைப்பு மட்டும்தான்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனையை அனுமதிக்காமல் தடுத்த கட்சியின் தொண்டர்கள் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அணுகுமுறையும் சரி இல்லை. நடிகர் விஜய் வீட்டில் எதற்கு சோதனை நடத்தினார்கள்? சோதனை முடிந்த பிறகு எல்லாம் சரியாக இருக்கிறது என்று கூறினார்கள்? அதற்கு அவர்கள் அலுவலகத்தில் (வருமான வரி துறை அலுவலகம்) நடிகர் விஜய் சமர்பித்து இருக்கும் ஆவணங்களை சோதனை செய்திருந்தால் போதும். இவர் வீட்டில் வந்து தான் சோதனை செய்ய வேண்டுமா? மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் நல்ல பெயரை கலங்க படுத்த வேண்டும் என்கிற நோக்கில் சோதனை நடத்தினர்.
என்னுடைய வீட்டில் சோதனை செய்தால் அவர்கள் தான் எனக்கு பணம் தரவேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். அதனால் தான் என்னுடைய வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தவில்லை. மோடி அரசு ஆட்சிக்கு வந்து 9 வருடங்கள் ஆகிறது. இன்னும் ஒருமுறை பாரதிய ஜனதா கட்சியின் கைகளில் ஆட்சி செல்லக்கூடாது என்பது இந்தியாவின் அனைத்து குடிமக்களின் கடமை ஆகும். நாடாளுமன்றத்தில் வைக்க இருப்பது சோழர் காலத்து செங்கோல் இல்லை அது உம்மிடி பங்காரு செங்கோல், அதனை வைப்பதால் தமிழர்களுக்கு என்ன பயன்? ஒரு பயனும் இல்லை.
தமிழ், தமிழ் என்று பேசுகிறார்கள் எல்லாம் தேர்தல் வரும் வரை தான் பேசுவார்கள். அதன் பிறகு காணாமல் போய் விடுவார்கள். தமிழ் இந்தியர்களின் மொழி என கூறும் பிரதமர் ஏன் தமிழை ஆட்சி மொழியாக்கவில்லை. தற்போது முதலமைச்சர் ஜப்பான் சென்றுள்ளார் . அங்கு இருக்கும் தொழில் முனைவர்களையும் முதலமைச்சர்களையும் சந்திக்கிறார். சிங்கப்பூர் முதல் பிரதமர் குவான் யூ-வுக்கு மன்னார்குடியில் நினைவு சின்னம், இங்கு வந்து வைப்பதாக கூறி உள்ளார். இதுதான் வாடிக்கையாக கொண்டு உள்ளார்.
அவருக்கு சிலை வைப்பது முக்கியமில்லை. அவரைப் பற்றி அவர் செய்த சாதனைகள் பற்றி பாடப் புத்தகங்களில் இடம்பெறச் செய்தாலே போதும், மாணவர்கள் அதை படித்து தெரிந்து கொள்வார்கள். சிலை வைப்பது தமிழ்நாடு அரசுக்கு தண்ட செலவு தான்” என கூறினார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜியை பழிவாங்க ஐடி சோதனை; இதெற்கெல்லாம் திமுக அஞ்சாது: அதிரடி காட்டிய ஆர்.எஸ்.பாரதி!