சென்னை: இந்தியா சுதந்திரமடைந்த 75ஆவது ஆண்டு விழா, ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி) வீரர்கள் நாடு முழுவதும் வாகனப் பயணத்தை மேற்கொண்டனர்.
இதனையடுத்து காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ஆம் தேதி, என்எஸ்ஜி வீரர்கள் புதுடெல்லியிலிருந்து தங்களது பயணத்தைத் தொடங்கினர்.
என்எஸ்ஜி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு
பின்னர் இந்தக் குழுவினர் லக்னோ, வாரணாசி, கயா, ஜாம்ஷெட்பூர், கொல்கத்தா, புவனேஸ்வர், கோபால்பூர், விஜயவாடா, ஹைதராபாத், ஓங்கோல் வழியாக பயணம் செய்து இன்று (அக்.19) சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்தடைந்த என்எஸ்ஜி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தப் பயணம் குறித்து வாகனப் பயணக்குழுவின் தலைவர் கர்னல் உமேஷ் ரத்தோட் பேசுகையில், “தமிழ்நாடு எல்லை நெடுகிலும் உள்ள மக்கள் ஜெய்ஹிந்த், மகாத்மா காந்தி வாழ்க என கூறி எங்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தக் குழுவில் தேசியப் பாதுகாப்புப் படையின் 12 அலுவலர்கள், 35 கமாண்டோ வீரர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். நாங்கள் பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை பயணம் செய்து, அந்தந்தப் பகுதி மக்களின் பழக்க வழக்கங்கள், கலாசாரத்தை அறிந்துகொண்டோம்.
சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு, பெங்களூரு புறப்பட்டுச் செல்லவுள்ளோம். பின்னர் அங்கிருந்து மும்பை, அகமதாபாத் வழியாக, மொத்தம் 7 ஆயிரத்து 500 கிமீ பயணம் செய்து மீண்டும் டெல்லி சென்றடையவுள்ளோம்” என்றார்.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் ராணுவத் தளபதி ஆய்வு