சென்னை பாரிமுனை, என்.எஸ்.சி. போஸ் சாலையில் நடைபாதை வியாபாரிகளால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், நடைபாதை ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற 2013ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2013ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டஉத்தரவை மாநகராட்சி அமல்படுத்தாததால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், என்.எஸ்.சி. போஸ் சாலை நடைபாதை கடைகள் அமைப்பதற்கான இடமா? இல்லையா? என மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் நடைபாதை வியாபாரிகளுடன் இணைந்து காவலர்கள் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
நடைபாதை வியாபாரிகள் சங்கம் சார்பில், மொத்த வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்வதில்லை. பண்டிகை காலங்களில் ஏற்படும் ஆக்கிரமிப்பை அகற்ற புதிய கணக்கெடுப்பு நடத்திக் கடைகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, காலியிடங்களில் கடைகளில் வைக்க அனுமதி வழங்கினாலும் மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடைபெறுகிறது. விதிகளை மீறும் ஆக்கிரமிப்பாளர்கள் அதற்கான உரிமைக்காக வழக்குத் தொடர்வது வேதனையளிக்கிறது.
நடைபாதை வியாபாரிகளை ஒழுங்குமுறைப்படுத்த ஏன் பயோ-மெட்ரிக் முறையை கொண்டுவரக் கூடாது என மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், என்.எஸ்.சி. போஸ் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.