சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் படிக்கும் மாணவர்கள் தமிழை கட்டாயப் பாடமாக்கும் சட்டம் 2006ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
அதன் மொழிப்பாடத்தை தமிழில் எழுத வேண்டும். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறுபான்மை தனியார் பள்ளிகள் நீதிமன்றங்களுக்குச் சென்று விலக்கு பெறுகின்றன. இதனால் ஆண்டுதோறும் சிறுபான்மை மொழிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கடைசி நேரத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 9 லட்சத்து 38ஆயிரத்து 67 பேர் எழுத உள்ளனர். அவர்களில் தமிழ்மொழியில் 4 லட்சத்து 61 ஆயிரத்து 409 பேர் எழுதுகின்றனர்.
இந்த நிலையில், அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் , அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் 17ஆம் மதியம் முதல் www.dge1.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று, தங்கள் பள்ளியில் ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப்பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள மொழி சிறுபான்மையினர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பகுதி-1ல் தமிழ்மொழிக்கு பதிலாக, அவரவர் தாய்மொழிகளில் 2023ஆம் ஆண்டில் பகுதி 1-ல் தேர்வெழுத தீர்ப்பு பெறப்பட்டுள்ளது.
எனவே, இதுபோன்ற சிறுபான்மையினர் பள்ளிகளில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்கள் பகுதி1-ல் தமிழ் மொழிக்கு பதிலாக அவரவர் தாய்மொழிகளில் தேர்வெழுதவும் மற்றும் பிற மாநிலத்தில் பயின்ற மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு கல்வி பாடத்திட்டத்தில் தமிழ்நாட்டில் பிற கல்வி பாடத்திட்டத்தில் (CBSC, ICSE) பயின்ற மாணவர்கள் 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு தமிழ்நாடு கல்வி பாடத்திட்டத்தில் சேர்ந்து பயிலும் மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பகுதி1-ல் பிற மொழிப்பாடத்தில் தேர்வெழுதுவதற்கும் அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருந்தால் அதனை 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் திருத்தம் செய்ய வேண்டும். மாணவரின் அனைத்து வகையான திருத்தங்களும் EMIS PORTAL-லில் மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும்' என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க:மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 பள்ளி மாணவிகள் பலி - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!