கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதனால், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், ரயில், விமானம், என அனைத்து போக்குவரத்து சேவைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து சென்னை வந்து பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வட மாநில இளைஞர்கள் பலர் தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தற்போது, மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், வட மாநில தொழிலாளர்கள் பலரும் நடைபயணமாக சொந்த ஊருக்குச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனிடையே, பெருங்களத்தூர் அடுத்த ஆலப்பாக்கத்தில், தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி கடந்த 10 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில் நேற்று (மே 4) ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, வருவாய்த்துறையினர் ஆகியோர் இணைந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால், அதில் சமாதானமாகாத சில இளைஞர்கள் கற்களை எடுத்து சாலையில் செல்வோர் மீதும், எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலும் வீசியதால் பதற்றமான சூழல் நீடித்தது.
இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில், 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, 'கை' கொடுக்கும் காங்கிரஸ்!