சென்னை குரோம்பேட்டை சி.எல்.சி வொர்க்ஸ் சாலையில் குரோம்பேட்டை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் பையுடன் சுற்றித்திரிந்த வட மாநில இளைஞர் ஒருவர், காவல்துறையினரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார். இதனையடுத்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர், அவரை குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
ஆனால், அந்த இளைஞர் காவல்துறையினரின் கேள்விகளுக்கு பிடி கொடுக்காமல் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இளைஞரின் பையை சோதனை செய்ததில் 7 கிலோ 100 கிராம் அளவிலான கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த இளைஞரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த இளைஞர் மணிப்பூரை சேர்ந்த சன்ஜாங்லங்(22) என்பதும், அவர் மாதம் இருமுறை மணிப்பூரிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு கஞ்சா எடுத்து வருவதும் தெரியவந்தது. மேலும், அந்த இளைஞர் தான் எடுத்துவரும் கஞ்சாவில் வாசனை வராமல் இருக்க அதில் வாசனை திரவியங்களை தெளித்துக் கொண்டுவருவதாகவும் தெரிவித்தார். அவ்வாறு எடுத்துவரப்படும் கஞ்சாவை, கல்லூரி மாணவர்களுக்கும், புறநகர் பகுதிகளில் பணிபுரிந்துவரும் வட மாநிலத்தவர்களுக்கும் அவர் விற்பனை செய்துவந்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
நகை அடகு நிறுவனத்தில் 46.72 லட்சம் ரூபாய் மோசடி
இதையடுத்து அந்த இளைஞர் கஞ்சா மட்டும் விற்பவரா அல்லது வடமாநில கொள்ளைக் கும்பலை சேர்ந்தவரா என்ற கோணத்தில் குரோம்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.