சென்னை: இந்த ஆண்டு வடகிழக்குப்பருவமழை சில தினங்களுக்கு முன் தொடங்கியது. அதன் எதிரொலியாக அக்டோபர் 31ஆம் தேதி தொடங்கிய மழை 2ஆம் தேதி வரை தொடர்ந்து பெய்தது. சென்னையில் ஓராண்டிற்குப் பெய்ய வேண்டிய மழைப்பொழிவில் கிட்டத்தட்ட 17% இரண்டு நாட்களில் மட்டும் பெய்ததாக தகவல் கூறுகின்றன.
வடசென்னை, அதாவது திரு.வி.க நகரில் கடந்த ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 196 மி.மீ., மழைப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 236 மி.மீ., மழைப்பதிவானது. ஆனால், இந்த முறை அக்டோபர் 31ஆம் தேதி முதல் நவம்பர் 2 மாலை வரை திரு.வி.க நகரில் 353 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது. மழை அளவு சற்று அதிகமாக இருந்ததால், வழக்கம்போல மழை நீர் தேங்கி இயல்பு வாழ்க்கைப்பாதிக்கப்பட்டது.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பட்டாளம் மார்க்கெட் பகுதி, பெரம்பூர் பி.பி. ரோடு, வில்லிவாக்கம் ஜெகநாதன் நகர், வியாசர்பாடி ஜீவா சுரங்கப்பாதை, எம்.எம்.கார்டன் ஸ்டீபன் சாலை, முல்லை நகர், பெரம்பூர் ஜமாலியா பகுதிகளிலும் மழைநீர் தேங்கியிருந்ததால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி நடந்து செல்பவர்களும் அவதிக்குள்ளாகினர்.
வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்ததால் தான் தண்ணீர் தேங்கியது, மோட்டார் பம்புகளை வைத்து நீரை வெளியேற்றுகிறோம் என அமைச்சர் நேரு கூறியிருந்தார். ஆனால், அதிகமாக மழையைத்தவிர வேறு சில காரணங்களும் உள்ளன.
வடசென்னை முழுவதும் மழைநீர் வடிகால் பணி முடியாதது ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின்கீழ் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் ரூ.3,220 கோடி மதிப்பில் 769 கிலோ மீட்டர் நீளத்திற்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுமுடிவுபெற இன்னும் 3 ஆண்டுகள் எடுக்கும். தற்போதைக்கு மழைநீர் அதிக அளவில் நிற்கும் இடத்தை தேர்வு செய்து, மோட்டார்கள் மற்றும் சிறிய மழைநீர் வடிகால்கள் அமைத்து மழைநீரை வெளியேற்றி வருகின்றனர்.
ஓட்டேரி நல்லா கால்வாய், காந்தி கால்வாய், தனசேகரன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் போன்ற பெரிய கால்வாய்கள் வடசென்னைப் பகுதியில் உள்ளன. இந்த கால்வாய்களில் மழைநீர் அதிகம் செல்வதால் கால்வாய் நிரம்பி, மழைநீர் சாலைக்கு வந்துவிடுகிறது. கால்வாய்களின் ஆழத்தை அதிகப்படுத்தினால், மழைநீர் வெளியில் வராமல் தடுக்கமுடியும்.
அடுத்ததாக ரிவெர்ஸ் கிரேடியன்ட் (Reverse gradient), இந்த தொழில்நுட்பம் சரியான இடத்தில் சரியான ஆழத்தில் வைக்காத காரணத்தால் மழைநீர் வருகின்ற வேகத்திற்கு ரிவெர்ஸ் கிரேடியன்ட் ஈடு கொடுக்கமுடியாமல், தண்ணீர் வெளியேறாமல் அங்கே தேங்குகிறது.
ரிவெர்ஸ் கிரேடியன்ட் (Reverse gradient) தொழில்நுட்பம் என்பது வரும் மழைநீரை உள்வாங்கி மீண்டும் மோட்டார் உதவியுடன் நீரை வெளியேற்றுவது; குறிப்பாக மாநகராட்சி வரைபடம் வைத்து பார்த்தால் ஓட்டேரி நல்லா கால்வாய் பகுதியில் அதாவது ஸ்ட்ரான்ஸ் சாலையில் 3 அடியில் ரிவெர்ஸ் கிரேடியன்ட் வைத்துள்ளார்கள்.
கால்வாயும், கிரேடியனும் சம அளவில் இருக்கும்போது அங்கு கிட்டத்தட்ட 2 அடிக்கு தண்ணீர் நிற்க வாய்ப்புள்ளது. மேலும் டிகாஸ்டர் சாலையிலும் 2 அடியில் வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி அங்கங்கே திட்டமில்லாமல் ரிவெர்ஸ் கிரேடியன்ட் (Reverse gradient) வைத்து இருப்பது மழைநீர் சரியாக வெளியேறாமல் தேங்குவதற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக புவியியல் தகவல் அமைப்புத்துறை வல்லுநரும், கட்டுமானப் பொறியாளருமான, தயானந்த் கிருஷ்ணனிடம் பேசியபோது, "வடசென்னை என்பது ஒரு தாழ்வானப் பகுதி. அங்கு மழைநீர் செல்வதற்கான தகுந்த மழை நீர் வடிகால் மற்றும் வடிகால் அமைப்பது என்பது முக்கியம் ஆகும். பட்டாளம், புளியந்தோப்பு போன்றப்பகுதிகளில் வரும் மழைநீர் அங்குள்ள ஓட்டேரி நல்லா கால்வாய்க்குச்செல்கிறது என்றால், அது நிரம்பி மீண்டும் சாலைக்கு வந்து விடுகிறது.
அதைக்கட்டுப்படுத்துவதற்காக ரிவெர்ஸ் கிரேடியன்ட் (Reverse gradient) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆழம் குறைவாக இருக்கும்பொழுது இந்த தொழில்நுட்பம் பயன்படுத்துவதால் பெரிய அளவில் எந்த ஒரு பயனும் தராது. அதற்கு பதிலாக வெலாசிட்டி அக்சிலரேட்டர் பம்ப்பை (velocity accelerator pump) பயன்படுத்தினால் மழைநீர் வரும் வேகத்திற்கு, அது ஈடு கொடுத்து தண்ணீரை வெளியேற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி கால்வாயின் அளவு மற்றும் ஆழத்தை அதிகப்படுத்த வேண்டும்.
சென்னை மாநகராட்சி நிர்வாகம், வடசென்னையில் இருக்கும் மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் பற்றிய தகவலில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தண்ணீர் எங்கே எவ்வாறு செல்கிறது என்பது மக்களுக்குத்தெரியும். அதுமட்டுமின்றி மாநகராட்சி இன்னும் தீவிரமாக ஆராய வேண்டும். எந்தப் பகுதியில் தண்ணீர் அதிக அளவில் தேங்குகிறது, ஏன் அங்கு தேங்குகிறது முதலியவற்றைக் கண்டுபிடித்து தண்ணீர் அங்கு வருவதற்கு முன்பே, அதை அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
கடந்த முறையினைக்காட்டிலும் இந்த முறை மழையின் அளவு அதிகமாக இருந்தாலும் மாநகராட்சி மோட்டார்களை வைத்து விரைவில் வெளியேற்றினர். இருப்பினும் தண்ணீர் நிற்காமல் வெளியேற வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: உயிரைப்பறித்த கேட்; மின்சாரம் தாக்கி வயதான தம்பதி பலி!