சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்காகத் தமிழ்நாடு அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதில் குறிப்பாகச் சென்னையில் மற்ற பகுதிகளை விட மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்கும் விதமாகச் சென்னை மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், வடசென்னை பகுதிக்குள்பட்ட திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களில் கடந்த 7 ஆம் தேதியன்று தொற்று பாதிப்பு 4272 ஆக இருந்தது. இதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1421 பேருக்கும், குறைந்தபட்சமாக மணலியில் 182 பேருக்கும் தொற்று பாதிப்பு இருந்தது.
இதற்கிடையில் 12 ஆம் தேதி நிலவரப்படி வட சென்னைக்குள்பட்ட மண்டலங்களின் மொத்த பாதிப்பு 10,351 ஆக உள்ளது. இதில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,984 பேருக்கும், குறைந்த பட்சமாக மணலியில் 572 பேருக்கும் தொற்று பாதிப்பு உள்ளது.
கடந்த 5 நாட்களில் மற்ற மண்டலங்களை விடத் முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் அதிகபட்சமாக புதியதாக 1697 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், ராயபுரத்தில் 1563 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 1245 பேருக்கும், மாதவரத்தில் 734 பேருக்கும், திருவொற்றியூரில் 510 பேருக்கும், மணலியில் 390 பேருக்கும் என புதியதாகத் தொற்று பாதிக்கப்பட்டு தற்போது வடசென்னை பகுதியின் மொத்த பாதிப்பு 10351 ஆக உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி மட்டுமல்லாது சென்னையின் மற்ற பகுதிகள் மற்றும் தமிழ்நாடு முழுவதும் கரோனா பாதிப்பு ராக்கெட் வேகத்தில் உருவெடுக்கும் நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு வருமோ என்ற எண்ணமே மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற விவகாரம்: பெங்களூரு நீதிமன்றத்தில் சென்னை போலீசார் மனு