சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை டிச.4ஆம் தேதி புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் (MICHAUNG) டிச.5 ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம், பாபட்லா அருகே கரையைக் கடந்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழையின் பாதிப்பு மற்றும் வெள்ளம் வடிந்தாலும், கூட சில பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாததால் மக்கள் வீட்டிலும் நிவாரண முகாம்களில் முடங்கியுள்ளனர்.
சென்னையில் வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேற்கு தாம்பரம் ஆகிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வடசென்னைக்கு உட்பட்ட ராயபுரம் பனைமரத்தொட்டி பகுதியில் கடந்த 5 நாட்களாக அதிகாரிகளோ அல்லது தங்களுடைய சட்டமன்ற உறுப்பினரோ யாரும் தங்களை நேரில் வந்து பார்வையிடவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
போலீஸ் காரங்களுக்கா ஓட்டு போட்டோம்: தண்ணீர் தேங்கிய பகுதிகளில் யாரும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்றைய தினம் ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் மக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மோட்டார்கள் மூலம் தண்ணீர் வெளியேற நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து பேசிய அப்பகுதி பொதுமக்கள், “இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி இருந்தது. ஆய்வு நடத்த அதிகாரிகள் யாரும் வரவில்லை. கல்மண்டபம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் போலீசார் தான் அவர்களால் முடிந்ததை செய்து தண்னீரை வெளியேற்றி வருகின்றனர். போலீஸ் காரங்களுக்கா ஓட்டு போட்டோம். ஓட்டு வாங்குன யாரும் பாக்க வரலை” என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
இன்னலிலும் காத்த இளைஞர்கள்: பனைமரத்தொட்டி பகுதியில் பகுதியில் அரசு தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய பொதுமக்கள், “வீடு முழுக்க தண்ணீர் ஏறி பொருள் எல்லாம் வீணா போச்சு. சொந்தகாரங்க இருக்குறவங்க அங்க போய்ட்டாங்க, சொந்தக்காரங்க இல்லாதவங்க என்ன பண்ணுறது. அரசு தரப்பில் இருந்து எங்களுக்கு எந்த உதவியும் பண்ணல. இங்க இருக்குற விஜய் ரசிகர் மன்றம் பசங்களும், வாலிப பசங்களும், பிற பகுதியில் இருந்து பொதுமக்களும் தான் உதவி பண்ணுறாங்க.
மழை வருதுன்னு மக்களை அரசு எச்சரிச்சு பாதுகாப்பா முகாமில் தங்க வைக்கவில்லை. ஐந்து நாளா இந்த தண்ணிக்குள்ள தான் இருக்கோம். தேள், பாம்பு எல்லாம் வருது. உசுறுக்கு பாதுகாப்பில்லை. கால்வாய் தண்ணி எல்லாம் வீட்டுகுள்ள வந்துருச்சு. இப்படியே இருந்தா பிள்ளைங்களுக்கு எல்லாம் நோய் வந்திடும். அரசு சாப்பாடு கூட குடுக்க வேணாம். இங்க தேங்கி இருக்குற தண்ணியை வெளியேத்துனா போதும்” எனத் தெரிவித்தனர்.
ஸ்கூல் புக் எல்லாம் வீணா போச்சு: 3000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில், இங்குள்ள இளைஞர்களும் அருகில் இருக்கும் குடியிருப்பு வாசிகளே இதுவரை உதவி செய்து வருவதாக மக்கள் கூறுகின்றனர். மேலும் அவர்கள், “டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் எல்லாம் போச்சு. மாத்திக்க கூட வேற துணி இல்லை. இத்தனை வருஷம் கஷ்ட்டப்பட்டு சேர்த்தது எல்லாம் போச்சு. இதுல இருந்து நாங்க எப்படி மீண்டு வர்றது.
பிள்ளைங்க புக் எல்லாம் தண்ணீல நனைஞ்சு வீணா போச்சு. திங்கட்கிழமை அவங்களுக்கு அரையாண்டு பரிட்சை வேற வருது. பிள்ளைங்க ஸ்கூலுக்கு எதை கொண்டு போவாங்க. அதிகாரிகள் எல்லாம் இங்க கால்வாய் தண்ணீ தேங்கி இருக்குறதால உள்ள வராம வெளில இருந்தே பாத்துட்டு போய்டுறாங்க. 2 நாள்ல சரியாகிடும்னு சொன்னாங்க, 5 நாள் ஆகுது இன்னும் தண்ணீர் வடியலை” என தங்களது கவலையை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க: தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு லாரி மூலம் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்!