சென்னை: தமிழக கோவில்கள் பாதுகாப்பு தொடர்பாக நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இதில் சில உத்தரவுகளை அமல்படுத்திய தமிழக அரசு, சில உத்தரவுகளை மறு ஆய்வு செய்யக் கோரியும், விளக்கம் கேட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், கோவில்களையும், அதன் சொத்துக்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மட்டுமல்லாமல், கலாச்சாரம் மரபு அடங்கிய கோவில்களையும், பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.
மேலும், மாநில அளவிலான புராதன ஆணையத்தில் ஏற்கனவே 16 பேர் உள்ள நிலையில், அறநிலையத் துறையை சேர்ந்த ஒருவரை சேர்ப்பதில் தவறில்லை எனவும், இது தொடர்பாக சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டுமெனவும் அரசை வலியுறுத்தி உள்ளனர். அதனுடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பாதுகாக்க சட்டம் இயற்றுவதில் தீர்க்கமாக இருப்பதாக கூறிவரும் தமிழக அரசு, நீதிமன்ற உத்தரவுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது எனவும், பொது நலன் கருதி சட்டம் இயற்றும்படி கூற நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
மேலும், தமிழ்நாடு புராதன ஆணைய சட்டத்தில் கோவில்களும் அடங்கும் என விளக்கம் அளித்த நீதிபதிகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தளங்களான கோவில்களையும் மாநில அளவிலான புராதன ஆணையத்தில் சேர்க்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல கோவில்களின் வருமானம், செலவு ஆகியவை மத்திய கணக்கு தணிக்கை துறையால் தணிக்கை செய்யப்படுவதன் மூலம், மாநில அரசின் உரிமை ஏதும் பறிக்கப்படாது என தெரிவித்த நீதிபதிகள், தற்போது இருக்கக்கூடிய முறையுடன் மத்திய கணக்கு தணிக்கை துறையும் தணிக்கை செய்யலாம் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
அது மட்டுமின்றி, கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை ஒதுக்கீடு செய்வதாக இருந்தால், அதன்மூலம் கோவிலுக்கு பலன் இருக்க வேண்டுமெனவும், அறநிலையத்துறை சட்டத்தின்படியே இந்த ஒதுக்கீடு இருக்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோவில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்றும், கோவிலின் அன்றாட நிர்வாகத்தில் அறங்காவலர்கள் முக்கிய பங்கு வகிப்பதால், அரசியல் விருப்பங்களின் அடிப்படையில் மட்டுமே அறங்காவலர்களை நியமிக்க கூடாது எனவும் தெரிவித்தனர்.
அறங்காவலராக நியமிக்கப்படுபவர் ஆன்மீகவாதியாகவும், பக்தராகவும் இருக்க வேண்டுமெனவும், அரசியல்வாதிகளை நியமிப்பதை தவிர்க்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். அறங்காவலர்களின் நியமனம் பக்தர்களின் பங்களிப்புடனும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற வேண்டுமென உத்தரவிட்டு, அரசின் மறு ஆய்வு மனுவை முடித்துவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: "நல்ல விஷயம் நடக்கும் போது இது தேவையா..?" சி.எம் என்னை திட்டுவார் என கலாய்த்த கே.என்.நேரு!