சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் இன்று பட்டுக்கோட்டை தொகுதி உறுப்பினர் சி.வி. சேகர் பட்டுக்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
இதற்குப் பதிலளித்த வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ”2003ஆம் ஆண்டு அரசாணையின்படி புதிய மாவட்டம் உருவாவதற்கான அளவுகோல்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதில் புதிதாக உருவாக்கப்படும் மாவட்டத்திற்குப் பரப்பளவு குறைந்தது 2,500 சதுர கிலோ மீட்டர், மக்கள்தொகை குறைந்தது 10 லட்சம், 2 கோட்டங்கள், 5 வட்டங்கள், 200 கிராமங்கள் இருக்க வேண்டும் என அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் 3,396 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி 16.67 லட்சம் மக்கள் தொகையும், 3 வருவாய் கோட்டங்கள், 9 வருவாய் வட்டங்களும், 754 வருவாய் கிராமங்கள் என்ற எண்ணிக்கை கொண்டதாக உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து பட்டுக்கோட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க, கிராமங்களின் எண்ணிக்கை குறித்த அளவுகோல் மட்டுமே பூர்த்தியாகி உள்ளது.
மற்ற அளவுகோல்கள் பூர்த்தியாகவில்லை என்பதால் தஞ்சாவூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து பட்டுக்கோட்டை என்ற மாவட்டத்தை உருவாக்க சாத்தியக்கூறுகள் இல்லை. கொள்கை ரீதியிலான முடிவு எடுக்கக் கூடிய நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோரின் வேண்டுகோள்படி ஒரே ஆண்டில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கிய முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிங்க: "சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மக்களை ஏமாற்ற விரும்பவில்லை" அமைச்சர் உதயகுமார் பதில்!